மைத்திரி , கோட்டா கொலைச் சதி; இந்தியர் விடுவிப்பு!

248 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைப் படுகொலை செய்யச் சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையை விடுவிக்குமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் ஜயந்த டயஸ் நாணாயக்கார, இன்று (27) உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, மேற்படி இந்தியப் பிரஜைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்போவதில்லை என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டதை அடுத்தே, அவரை விடுவிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

எவ்வாறாயினும், உரிய விசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றத்துக்காக, இலங்கைக் குடி​வரவு-குடியகல்வுச் சட்டங்களுக்கமைய நடவடிக்கை எடுப்பதற்காக, எதிர்வரும 13ஆம் திகதி வரையில், அந்த இந்தியப் பிரஜை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, படுகொலைச் சதி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பயங்கரவா விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வாவின் விளக்கமறியல், எதிர்வரும் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.