ஆதாரத்தை தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் – இம்ரான்கான்

427 0

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரத்தை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார். 

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர். பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இயக்கம் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.

புல்வாமா தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை நடத்த இந்திய ராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறுகையில், “புல்வாமா தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்” என்றார்.

ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணம் என்பதற்கான ஆதாரங்களை ராணுவம் வெளியிட்டது. இந்த நிலையில் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில், “பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஓருங்கிணைந்து உள்ளன. பயங்கரவாதத்தை ஒழிக்கும் வி‌ஷயத்தில் இப்போது இந்தியாவிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது இருப்பது புதிய இந்தியா. இனியும் பயங்கரவாதத்தால் ஏற்படும் வலிகளை பொறுக்க இயலாது. பயங்கரவாதத்தை எப்படி அழிப்பது என்பது பற்றி எங்களுக்கு தெரியும்“ என்றார்.

மோடியின் இந்த பேச்சால் பாகிஸ்தான் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இம்ரான்கான் இந்தியாவை சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இம்ரான்கான் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா கருதினால் அதற்கான ஆதாரத்தை தரட்டும். அந்த ஆதாரத்தில் உண்மை இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது.

இந்த வி‌ஷயத்தில் கொடுத்த வாக்கை பாகிஸ்தான் ஒரு போதும் மீறாது. பாகிஸ்தானியர்கள் யாருக்காவது குண்டு வெடிப்பில் தொடர்பு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைதிக்கு ஒரு வாய்ப்பை இந்தியா வழங்க வேண்டும்.

இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறி உள்ளார்.