மரணதண்டனைகள் பலத்தின் வெளிப்பாடு அல்ல, பலவீனத்தின் ஒப்புதலாகும்-குமி நாயுடூ

199 0

மரணதண்டனையை நிறைவேற்றுவது என்பது பழிவாங்கும் உணர்வுக்கு மேலாக உயிர்வாழ்வதற்கான உரிமையின் பாதுகாப்பு வெற்றிபெறுகின்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் காணப்பட்ட தோல்வியையே பிரதிபலிக்கிறது.

மரணதண்டனைகள் பலத்தின் வெளிப்பாடு அல்ல, பலவீனத்தின் ஒப்புதலாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் குமி நாயுடூ எழுதியிருக்கும் பகிரங்கக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

18 பேருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான திட்டங்களைக் கைவிடுமாறும், மரணதண்டனை விதிக்கப்பட்ட சகலருக்கும் ஆயுட்காலச் சிறைத்தண்டனையாக அதைக் குறைக்கும் நோக்குடன் அவர்களது வழக்குகளை மீள்பரிசீலனை செய்யுமாறும் அவர் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் மரணதண்டனையை முற்றுமுழுதாக ஒழிக்கும் நோக்குடன் அத்தண்டனையை  (2007 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் நிறைவேற்றப்பட்ட ஏழு தீர்மானங்களுக்கு இசைவானமுறையில்) உத்தியோகபூர்வமாக தற்காலிக முடக்கம் செய்யுமாறும் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.