தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என எண்ணுவது முட்டாள் தனமாகும் -விமல்

236 0

மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என எதுவாக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஏனைய எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என எண்ணுவது முட்டாள் தனமாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொது ஜன பெரமுன இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளமை தொடர்பில் சில உறுப்பினர்கள் அதிருப்தியில் காணப்படுகின்றனர். இவ்வாறான சில காரணிகளால் தான் கூட்டணி அமைப்பதில் கால தாமதம் ஏற்படுகின்றது. 

தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமானால் ஒற்றுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே அதற்கான பலத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இவ்வாறு அதிருப்தி வெளியிடுபவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அவ்வாறு ஒற்றுமையாக செயற்பட்டால் மாத்திரமே வெற்றி இலக்கை அடைய முடியும். மாறாக தேர்தலில் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறமுடியும் என கற்பனை செய்வார்களாயின் அது பாரிய நெருக்கடியை உண்டாக்கும். 

ஜனாதிபதி தேர்தலில் தனியாக போட்டியிட எண்ணுவதும் வீண் முயற்சியாகும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாத்திரமல்ல, எந்த கட்சியானாலும் தனித்து போட்டியிட எண்ணினால் அது முட்டாள் தனமாகும் என்றார்.

இதன் போது முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தயார் எனத் தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவியதற்கு பதிலளித்த அவர், 

மேலும் நாட்டில் கட்சி பேதமின்றி மக்களுக்கு சேவை செய்த முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக்ஷவையே மக்கள் வேட்பாளராகக் கோருகின்றனர். 

எனவே மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்றார்.