முரண்பாடுகள் காரணமாகவே இலங்கைக்கு சர்வதேச முதலீடுகள் வரவில்லை-மஹிந்தானந்த

210 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் காரணமாகவே இலங்கைக்கு சர்வதேச முதலீடுகள் வரவில்லை. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் செய்துகொண்ட சர்வதேச முதலீடுகளே இன்றும் நாட்டுக்கு வருகின்றதே தவிர இந்த ஆட்சியில் எவரும் முன்வரவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் ,இன்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

இலங்கையின் முதலீடுகள் குறித்து இன்று விவாதம் நடத்தப்பட்டாலும் கூட இந்த ஆட்சியில் பாரிய  முதலீடுகள் எவையும் கொண்டுவரப்படவில்லை. ஒருசில சர்வதேச முதலீட்டாளர்கள்  இலங்கைக்கு வந்தாலும் கூட அவர்கள் எதோ ஒரு அச்சம் காரணமாக திரும்பி சென்று விடுகின்றனர்.

ஒருசில சந்தர்ப்பங்களில் கப்பம் கேட்கும் நிலைமையும் உள்ளது. இந்த ஆட்சிக் காலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் எவரும் இலங்கைக்கு வராததற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகளே காரணமாகும். 

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் செய்துகொண்ட பாரிய வேலைத்திட்டங்கள் மூலமாக இணங்கிய சர்வதேச முதலீட்டாளர்கள் தான் இன்றும் நாட்டில் முதலீடுகளை செய்து வருகின்றனர். 

குறிப்பாக துறைமுக நகர் மற்றும் சங்கிரில்லா போன்ற வேலைத்திட்டங்களின் மூலமாக நாம் கொண்டுவந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மட்டுமே இன்றும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த ஆட்சியில் ஒருசில சில்லறைத்தனமான முதலீடுகளை பிடித்துக்கொண்டு இவர்கள்  மார்தட்டிக்கொள்ளும் நிலைமையே உள்ளது. ஹொரண டயர் நிருவனம் குறித்து மட்டுமே இவர்களால் பேச முடிந்துள்ளது. ஆயிரம் பில்லியன் வேலைத்திட்டம் ஒன்று கூட இவர்கள் செய்யவில்லை. அவ்வாறான பாரிய முதலீட்டாளர் ஒருவரை இவர்களால் நாட்டுக்கு கொண்டுவர முடியாது என்றார்.