விரைவில் தென்னிந்தியாவுக்கு படகுச் சேவை!

177 0

காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து தென்னிந்தியாவுக்கு பயணிகள் மற்றும் சரக்கு படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்த திட்டங்கள் இன்னும் சில தினங்களில், இலங்கை துறைமுக அதிகார சபையினால் வகுக்கப்படு​மென, பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக, இந்தியா- இலங்கை இணைந்த வகையிலான ரயில் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் போக்குவரத்தை மேலும் அதிகரிக்கவும், அங்கிருந்து தென்னிந்தியாவுக்கு பயணிகள் படகுச் சேவை வசதிகளை ஏற்படுத்தவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதன் மூலம், குறைந்த செலவில் இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு கிழக்கில் யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலாக இணைந்த ரணில் சேவை இருந்ததாகவும், கொழும்பு கோட்டை மற்றும் சென்னை நகருக்கு இடையில் ஒரு அனுமதி அட்டையை கொண்டு பயணம் செய்யும் வசதி இரு நாட்டு பயணிகளுக்கும் வழங்கப்பட்டிருந்ததாகவும், பிரதமர் அலுவலக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.