ரூ.20 கோடி பட்டாசுகளுடன் தீபாவளி விற்பனைக்கு தயாராகும் தீவுத்திடல்

254 0

crackers_3032239fரூ.20 கோடி மதிப்புள்ள பட்டாசுகளுடன் தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தயாராகிறது தீவுத்திடல். வரும் 15-ம் தேதிமுதல் தீபாவளி பட்டாசுகள் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 29-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண் டாடப்படவுள்ளது. தீபாவளிக்கு இன்னும் 28 நாட்களே உள்ள நிலையில் சென்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு கடைகள் வந்துள்ளன. இருந்தாலும், சென்னை தீவுத் திடலில்தான் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை படு ஜோராக இருக்கும். தீவுத்திடலில் கடைகள் அமைப்பதற்கான முன் னேற்பாடுகள் தொடங்கிவிட்டன.

கடந்த 2010-ம் ஆண்டு சென்னை பாரிமுனை பந்தர் தெருவில் 2 பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பட்டாசு கள், பொருட்கள் எரிந்து நாசமாகின. ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மக்கள் நடமாட்டம் மிகுந்த குறுகலான தெருக்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், 39 ஆண்டுகளாக பட்டாசு விற்பனை நடந்து வந்த பந்தர் தெருவில் பட்டாசு விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டது.

பின்னர், 2011-ம் ஆண்டுமுதல் தீவுத்திடலில் பட்டாசு கடை கள் அமைக்கப்பட்டு விற்கப் படுகின்றன.

கடந்தாண்டு கனமழை காரணமாக பட்டாசு விற்பனை மந்தமாக இருந்தது. அதனால், விற்பனையாகாத பட்டாசுகளை சென்னையில் இருப்பு வைக்க வசதியில்லாததாலும், கடைகளில் வைத்து விற்க முடியாத காரணத்தாலும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் கிடங்குகளில் ஆண்டு வாடகை கொடுத்து ரூ.3 கோடி மதிப் புள்ள பட்டாசுகளை சென்னை வியாபாரிகள் இருப்பு வைத்துள்ளனர்.

“கடந்த ஆண்டுகளைப் போல இந்தாண்டும் புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் ரூ.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்காக மட்டும் வரும் 14-ம் தேதிக்குள் ரூ.20 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் சிவகாசியில் இருந்து சென்னை வந்துசேரும். புதிய ரக பட்டாசுகளில் ஃபேன்சி ரக பட்டாசுகளான டான்சிங் வீல், ஃப்ளவர் வீல், ஃப்ளவர் பாம், எலக்ட்ரிக் ஸ்டோன், கலர் சேஞ்சிங் பட்டர்பிளை, எமரால்டு ஆகியன குறிப்பிட்டத்தக்கவை” என்று பட்டாசு வியாபாரிகள் தெரிவித்தனர்.

விற்பனையாளர்கள்

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடர்பாக சென்னைப் பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்க செயல் தலைவர் எம்.ஷேக் அப்துல்லா கூறியதாவது:

இந்தாண்டு சென்னைப் பெருநகர பட்டாசு விற்பனை யாளர்கள் சங்கம் மற்றும் சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தினர் தீவுத்திடலில் 58 பட்டாசு கடைகளை அமைக்க உள்ளனர். ஆர்டர் கொடுத்த அனைத்து பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு சிவகாசி பட்டாசு உற்பத்தி கிடங்குகளில் தயாராக உள்ளன.

தீவுத்திடலில் கடைகள் அமைக்கப்பட்டதும் 8 மணி நேரத்தில் சிவகாசியில் இருந்து சென்னை வந்துசேரும். வரும் 15-ம் தேதியில் இருந்து தீவுத் திடலில் பட்டாசு விற்பனை தொடங்கும். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பட்டாசுகளின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. பட்டாசு கிப்ட் பேக்கின் விலை ரூ.250 முதல் ரூ.3 ஆயிரம் வரை உள்ளது என்றார் ஷேக் அப்துல்லா.

சாலையில் விற்பதால் நஷ்டம்

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும் அதே நேரத்தில் சாலையோரத்தில் சிலர் பட்டாசு விற்பதால் நஷ்டம் ஏற்படும். சாலையில் பட்டாசு விற்பதை வியாபாரிகள் தட்டிக்கேட்டால் பிரச்சினை வரும். எனவே, சாலையில் பட்டாசு விற்பனையை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தாண்டு தீவுத்திடலில் போர் நினைவுச் சின்னம் பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவதால் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படும் அச்சம் இருக்காது என்று பட்டாசு வியாபாரிகள் தெரிவித்தனர்.