கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து மன்னிப்பு அளித்து ஒன்றுபட வேண்டும்-ரணில்

250 0

கடந்த கால நிகழ்வுகளின் கசப்புணர்வுகளை மறந்து ஒவ்வொருவருக்கிடையில் மன்னிப்பு அளித்து இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

தென்னாபிரிக்கா போல் மன்னித்து கவலைகளை மறந்து நல்லிணக்கத்திற்காக முன்னோக்கி நகர்வோம் என்றும் கூறினார். 

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று(15) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

உண்மையைக் கண்டறிதல், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதன் ஊடாக இந்த இலக்கை அடைய முடியும் என்று சுட்டிக்காட்டிய அவர் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் ஆகியோருக்கு எதிராக வழக்குகள் காணப்படுகின்றன. 

இவை அனைத்துமே 2015 ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான வழக்குகளை தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. நாம் உண்மையை பேசி, கவலையைத் தெரிவித்து மன்னிப்பு கோரி ஏனைய விடயங்களை முன்னெடுக்க வேண்டுமென பிரதமர் தெரிவித்தார். 

தொடரப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் இரு தரப்பிலும் தொடரப்பட்டுள்ளன. தற்போது உண்மையைக் கூறி மன்னிப்புக் கோரி அவற்றை நிறைவு செய்வதே வெற்றியாகும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரும் பாதுகாப்பு துறையினரே அனைத்து சேவைகளிலும் ஈடுபட்டிருந்தனர். 

எதிர்வரும் பத்து வருடங்களுக்குள் இந்த பிரச்சனைகள் அனைத்தும் நிறைவுக்கு வரும். இரு தரப்பினருக்கும் என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படும். அனைத்தையும் மன்னித்து ஏற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றை பயன்படுத்தாமலிருப்பது சிறந்ததல்ல. வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்த முடியாவிட்டால் அதனை அரசாங்கத்திடம் கையளியுங்கள். தென் மாகாண சபை நிதி ஒதுக்குமாறு கோரி அடிக்கடி எம்முடன் முரண்படுகின்றனர். தென் மாகாண சபை எதிர்க்கட்சியாக காணப்பட்ட போதிலும் இவ்வாறான விடயங்களை முன்னெடுக்கின்றனர். 

நாட்டில் பல கடன் சுமைகள் காணப்படுகின்றன. விஷேடமாக வடக்கை கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதனை சீர்குலைக்க முடியாது. காரணம் எமக்கிடையில் நல்லிணக்கம் காணப்படுகின்றது. எனவே நாம் பயமின்றி இவற்றுக்கு முகங்கொடுத்து சிறந்தவொரு பயணத்தை முன்னெடுக்க வேண்டும். 

தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் பல துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த வெள்ள அனர்தத்தின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது. 

கிளிநொச்சி வைத்தியசாலையின் அபிவிருத்தியின் இரண்டாம் கட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. புதிய கட்டடத் தொகுதி, வோட் தொகுதி, சத்திரசிகிச்சைப் பிரிவு என்பனவும் உள்ளடங்குகின்றன. 

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர்களான வஜிர அபேயகுனவர்தன, றிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், பி.ஹரிசன், சாகல ரத்னாயக்க, விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், த. சித்தார்த்தன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.