மன்னார் புதைகுழி விவகாரம்–காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது

279 0

குறித்த அறிக்கை வெளியாகியுள்ளமையினை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ உறுதிபடுத்தியுள்ளார். 

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி, மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கையளிக்கப்பட்டன. 

மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான காபன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

அவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

அவ்வாறு பெறப்பட்ட அறிக்கை, எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என்று சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

குறித்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை 146 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது 323 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றில் 314 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 28 சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.