மதூஷ் குறித்த பொலிஸ் விசாரணைகள் நிறைவு

33 0

டுபாய் ஆறு நட்சத்திர ஹோட்டலில்  வைத்து கைது செய்யப்பட்டு தற்போது பர் டுபாய் தலமை பொலிஸ் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அல் ரபா பொலிஸ் கூண்டில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரக  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 

இந் நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக டுபாய் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் டுபாய் மற்றும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரக அதிகரிகள் நேரடியாக அமீரக அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும், சந்தேகநபர்களை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான திகதி தொடர்பில்  நேற்று மாலை வரை எந்த தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை. 

இதனிடையே மாகந்துரே மதூஷுடன், பிரபல பாடகரான அமல் பெரேரா, அவருடைய மகனான நந்திமால் பெரேரா மற்றும் நடிகர் ரயன் வென்ங் ரோயன் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கடந்த 5 ஆம் திகதி டுபாய் ஹோட்டலில் ,  பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் பிரபல பாடகரான அமல் பெரேரா மற்றும் அவருடைய மகனான நந்திமால் பெரேரா டுபாயில் தடுத்தி வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முன்னர் அவர்களை விடுவித்துக் கொள்வது தொடர்பில்  பொலிஸாரிடம் ஆவணங்களை சமர்பிப்பதற்கு சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன உள்ளிட்ட குழுவினர் டுபாயிற்கு சென்றுள்ளனர்.

இந் நிலையில் உதுல் பிரேமரத்ன சட்டத்தரணிகள் குழு இன்று பர் டுபாய் தலைமையக பொலிஸ் நிலையத்தின் சட்ட அதிகாரி மொஹமட் அல் நக்பியை சந்தித்து அவ்விருவரையும் விடுவிக்க ஏதுவான காரணிகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். 

கைதானதாக கூறப்படும் 31 சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தககல் செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. 

அவர்களுக்கு எதிராக முன்வைக்க முடியுமான குற்றச்சாட்டுக்கள், அது சார்ந்த சட்டப் பிரிவுகள் தொடர்பில் பர் டுபாய் பொலிசார் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது. 

Leave a comment

Your email address will not be published.