தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார் – கீதாஜீவன்

212 0

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார் என்று கீதாஜீவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

எந்த கட்சி எந்த கூட்டணியில் சேரும் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் தலைவர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமத்தை தத்தெடுத்து அங்கு எம்.பி. தொகுதி நிதியின் கீழ் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார்.

மேலும் அவர் அடிக்கடி தூத்துக்குடி சென்று கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வந்தார். கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதன் மூலம் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

இப்போது கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறி கீதாஜீவன் எம்.எல்.ஏ. உறுதிப்படுத்தியுள்ளார். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன் பேசுகையில் இந்த தகவலை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிட உள்ளார். கனிமொழி 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். இங்குள்ள பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்று நிச்சயமாக மத்திய மந்திரியாக பதவியேற்பார். அதன்பிறகு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக வளர்ச்சி திட்டங்கள் வரும். மக்களின் குறைகள் அனைத்து நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment