பாராளுமன்றில் எம்.பி.க்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடு

461 0

பாரிய நிதி மோசடி விவாதத்தை நடத்துவதில் சபையில் சுமந்திரன், பிமல் ரத்நாயக எம்.பியுடன் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச எம்.பிக்கள் முரண்பட்டனர்.

மும்மொழிகளிலும் அறிக்கை இல்லாது விவாதிக்க முடியாது எனவும் வாசுதேவ, விமல் எம்.பியினர் சுட்டிக்காட்டினர். எனினும் எதிர்ப்பையும் மீறி அறிக்கையை சமர்ப்பித்து விவாதத்தை நடத்தினார் சுமந்திரன் எம்.பி.

பாராளுமன்றத்தில் நேற்று  தமிழ் தேசிய கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் பாரிய நிதி மோசடி மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மீதான சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணையை கொண்டுவந்தார். இதன்போது சுமந்திரன்  எம்.பி உரை நிகழ்த்த தயாராகிய நேரத்தில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய வாசுதேவ நாணயகார எம்.பி, அறிக்கைகள் மீதான விவாத்ததை நடத்த மூன்று மொழிபெயர்ப்பு அறிக்கையும் அவசியமாகும். ஆனால் அவ்வாறு இல்லாது விவாதத்தை நடத்த முடியாது, ஏற்கனவே கடந்த ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  போது சுமந்திரன் எம்.பி இதே காரணியை கூறி விவாதத்தை ஒத்திவைத்தார். ஆகவே இப்போதும் அதே நியதிதான். சபையை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றார். 

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி:- கட்சி தலைவர் கூட்டத்தில் இந்த விவாதம் குறித்து இணக்கம் தெரிவித்த பின்னரே எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே விவாதிக்க முடியும் என்றார். 

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி:- அன்று இதேபோன்று பிரச்சினை எழுந்த போது சுமந்திரன் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி விவாத்ததை தடுத்தார். இன்றும் அதே பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அவருக்கு எங்கிருந்து அங்கீகாரம் கிடைத்தது. சுமந்திரன் தான் நினைத்த வகையில் அரசியல் அமைப்பினை மாறியமைக்க முடியாது என்றார். 

இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் கிரியெல்ல :- மொழிப் பிரச்சினை பெரிய விடயம் அல்ல. உங்களுக்கு இந்த விவாதம் நடத்த விருப்பம் இல்லையென்றால் நேரடியாக கூறுங்கள் விவாத்ததை நிறுத்துகின்றோம் என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பிமல் ரத்நாயக எம்.பி:- ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பாராளுமன்றத்தில் உள்ள சில முக்கிய உறுப்பினர்கள் பெயர்கள் உள்ளது. அந்த நபர்கள்தான் இன்று விவாதத்தை தடுக்க முயற்சித்து வருகின்றனர் என்றார். 

இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி:- அன்று நான் விவாதத்தை தடுக்கவில்லை. விவாதிக்கும் போது ஆங்கில அறிக்கை இருந்தால் போதும் என கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுத்தும் அன்றைய விவாதத்தில் ஆங்கில அறிக்கை இல்லாது வெறுமனே சிங்கள அறிக்கை மட்டுமே இருந்தது. ஆகவே ஆங்கில அறிக்கையை தரக்கோரினேன். நான் மொழிப் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை என்றார். இறுதியாக அவர் பிரேரணை மீதான விவாதத்தை நடத்தினார் . பிமல் ரத்நாயக எம்.பி அதனை வழிமொழிந்து உரையாற்றினார்.

Leave a comment