சட்டவிரோதமாக கற்றாலைச் செடிகள் அகழ்வு

243 0

நானாட்டன் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாலம் பிட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் தொடர்ச்சியாக கற்றாலை சொடிகள் சட்ட விரோதமான முறையில் அகழ்வு செய்யப்படுகின்ற போதும், வங்காலை பொலிஸார் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதில்லை என வங்காலை கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வங்காலை கற்றாலம் பிட்டி பகுதியில் வன ஜீவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில் அரிய வகையான கற்றாலைச் செடிகள் காணப்படுகின்றது.

அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக இனம் தெரியாத நபர்களினால் குறித்த கற்றாலைச் செடிகள் சட்ட விரோதமாக அகழ்வு செய்யப்பட்ட போதும், கிராம மக்களினால் குறித்த நபர்கள் பிடிக்கப்பட்டு வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

எனினும் பல முறைகள் குறித்த அகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற போதும், ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்றாலைச் செடிகள் அகழ்வு செய்யப்பட்ட நிலையில் கைவிடப்படுகின்றது.

இதனால் குறித்த பகுதியில் கற்றாலைச் செடிகள் அழிவடைந்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்றிரவு குறித்த கற்றாலம் பிட்டி பகுதியில் வேறு இடங்களைச் சேர்ந்த மூவர் கற்றாலை செடிகளை அகழ்வு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அவதானித்த வங்காலை கிராமத்தைச் சேர்ந்த பிரதேச வாசி ஒருவர் வங்காலை ஆலைய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், அப்பகுதிக்கு உடன் சென்றுள்ளனர்.

எனினும் அகழ்வு செய்யப்பட்ட பல முடைகளைக் கொண்ட கற்றாலைச் செடிகளை கைவிட்டு அகழ்வு செய்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வங்காலை மக்கள் தமது விசனத்தை தெரிவித்துள்ளனர். வியாபார நோக்குடன் குறித்த கற்றாலைச் செடிகள் அகழ்வு செய்யப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

எனினும் தமது கிராமத்தில் மருத்துவ தேவைகளுக்கு கூட ஒரு கற்றாலையையும் தாம் அகழ்வு செய்வதில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடையத்தில் வங்காலை பொலிஸார்,வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளுவதினாலேயே குறித்த சம்பவம் தொடர்ச்சியாக இடம் வருவதாகவும், எனவே பொலிஸாரும், உரிய அதிகாரிகளும் குறித்த சம்பவங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என வங்காலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment