சுதந்திர தமிழீழத்திற்கான எழுதலே;நடைபெற்ற முற்றவெளி, ஜெனீவா எழுச்சிப் பேரணி! –

426 0

‘அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால், எமது விடுதலை இலட்சியம் வெற்றிபெறுவது நிச்சயம்’ என்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சி மொழிக்கு அர்த்தம் சேர்க்கும்வகையிலான சுதந்திர தமிழீழத்திற்கான எழுதலே;கடந்த நாட்களில் நடைபெற்ற முற்றவெளி, ஜெனீவா எழுச்சிப் பேரணிகளாகும்.

அனைத்துலக பங்கேற்போடு சிறிலங்கா பேரினவாத அரசு தமிழர் தாயகத்தில் நிகழ்த்திய நூற்றாண்டு கண்டிராத மாபெரும் மனிதப்பேரழிவுடன் தமிழர்கள் ஓய்ந்துபோய்விடுவார்கள் என மனப்பால் குடித்துக்கொண்டிருந்தவர்களை முற்றவெளியில் ஆரம்பித்து ஜெனிவாவில் தொடர்ந்த மக்கள் எழுச்சி கதிகலங்கவைத்துள்ளது.

img_0444

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இம்முறை ஜெனிவாவில் கூடிய பல்லாயிரம் தமிழர்களின் எழுச்சிக்கான உந்துவிசையாக ஏழாண்டு மௌனத்திற்கு முற்றுப்புள்ளியாய் அமைந்த முற்றவெளி ‘எழுக தமிழ்’ ஒன்றுகூடழும் அமைந்திருந்தது.

ஆயுதமௌனிப்புடன் முள்ளிவாய்க்காலில் மௌனித்த விடுதலைப்போராட்டம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைத்திடலில் நீதிக்கான போராட்டமாக உயிர்பெற்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஒவ்வொரு அமர்விலும் தமிழினப்படுகொலை விவகாரம் முக்கிய பேசுபொருளாக்கப்பட்டதற்கு புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களின் உறுதிமிக்க போராட்டங்களே வழிவகுத்திருந்தது.

மறுக்கப்பட்டுவரும் நீதியை தாமதமின்றி வழங்குமாறு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் பல்லாயிரம்பேர் ஜெனிவாவில் ஒன்றுகூடிய நிகழ்வானது இதனையே பறைசாற்றுகிறது.ஜெனிவா பேரணியில் அதிகமான தமிழ் இளையோர்கள் கலந்துகொண்டு நீதி கோரியது எமது போராட்டம் தெளிவாக விடுதலையை நோக்கி தொடர்கின்றது என்பதை உறுதிப்படுத்தியது.

genf2

மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் சேர்ந்து கேட்கிறோம் பதில் தருவார்களா…? என ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியில் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மேலும் வலிமை சேர்ப்பதாகவே ஜெனிவா பேரணியும் அமைந்துள்ளது.

2009 மே-18 இற்கு பின்னர் தாயகக் களமானது தேக்கநிலையை அடைந்திருந்தது. இடைப்பட்ட ஏழாண்டுகளில் தமிழர் தேசத்தில் தமிழர் தலைமையின் அவசியமுனர்ந்து வாக்குப் புரட்சி செய்தது தவிர்த்து சிறு சிறு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளே நடந்துள்ளது. இந்தப்பின்னணியில்தான் தாயகத்தின் எழுச்சி தணிந்துபோய்விட்டதாக சர்வதேசமும் சிங்கள தேசமும் அடிபணிவு அரசியல் செய்துவரும் தமிழ் அரசியல்வாதிகளும் மனப்பால் குடித்துக்கொண்டிருந்தார்கள்.

இதன் வெளிப்பாடாகவே, தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி நிற்கும் வடக்கு மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் மீது அனைத்துலக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவந்தது.

சிறிலங்கா சனாதிபதி மற்றும் பிரதமரின் சம்பிரதாய வருகைகளும் அள்ளிவீசும் வாக்குறுதிகளும் தமது வாழ்வில் எதுவித மாறுதல்களையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதுடன், தமிழர்களுக்கான நீதி சர்வதேச சமூகத்தால் பிராந்திய நலன்களுக்குள் பலியிடப்படுவதனையும் உணர்ந்துகொண்டதனாலேயே எமது தாயக மக்கள் ஏழாண்டு மௌனம் கலைத்து ‘எழுக தமிழராய்’ பேரெழுச்சி கொண்டுள்ளார்கள்.

பாலின வேறுபாடுகள் கழைந்து வயது வேறுபாடின்றி இலட்சியத்தில் ஒன்றுபட்ட மக்களாக முப்பதாயிரத்திற்கு மேலானவர்கள் ‘தமிழ் மக்கள் பேரவை’யின் அழைப்பை ஏற்று முற்றவெளியில் அணியமாகியமை மாபெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளதுடன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பெரும் உந்துதலையும் கொடுத்துள்ளது.

img_0445

தம்மீதான இனப்படுகொலை குற்றத்தில் இருந்து தப்பிக்கும் ஒரே காரணத்திற்காக சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளை மறுபேச்சின்றி நிறைவேற்றிவரும் சிறிலங்கா அரசின் நல்லிணக்கப் பொறிக்குள் தெரிந்தே விழுந்துகிடக்கும் அனைத்துலக நாடுகளின் சுயநலப்போக்கால் ஏற்பட்ட விரக்தி ஒருபக்கமும் தாயக அரசியல் தலைமைகளின் அடிபணிவு அரசியல் போன்ற முட்டுக்கட்டைகள் மறுபக்கமுமாக சூழ்ந்துகொண்ட இவ்வேளையில் ஜெனிவா மற்றும் முற்றவெளி பேரணிகள் என்றும் இல்லாதவாறான முக்கியத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

‘இலட்சியத்தில் ஒன்றுபட்டு எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது’ என்ற தேசியத் தலைவரின் சிந்தனைத் தடத்தில் களமும் புலமும் ஒன்றிணைந்துள்ளமையானது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுணையாகும்.

அந்த வகையில், சுதந்திர தமிழீழத்திற்கான எழுதலாகவே முற்றவெளி, ஜெனீவா எழுச்சிப் பேரணிகள் அமைந்துள்ளன.நாளைய தினம் (01.10.2016) மாலை 5 மணிக்கு கனேடிய மண்ணிலும் (Albert Campbell (Scarborough Town Centre) எழுக தமிழ் மாபெரும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது . இப்பெரும் பேரணியில் கனடாவில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் பெரும்திரளாக கலந்துகொண்டு உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க செய்யவேண்டுமென அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை(ICET) ஆகிய நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’