எவன்கார்ட் வழக்கு – வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

215 0

இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக நீக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பதாக அவர் உத்தரவிட்டுள்ளார். 

அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிரதிவாதிகளுக்கு நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக நீக்க உத்தரவிட்டுள்ளார். 

கடந்த அரசாங்க காலத்தில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியதாக எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதுபோன்று பணம் வழங்கியது மற்றும் அரச உத்தியோகத்தர் என்ற வகையில் பணம் பெற்றுக் கொண்டமை ஆகியன இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தண்டணைக்குறிய தவறு என்று தெரிவித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment