அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை அமைச்சரிடம்….

218 0

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை இன்று (21) நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை சம்பந்தமாக உண்மையை கண்டறிவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. 

சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பினால் இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டிருந்தன. 

இதனை அடுத்தே இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரல இரு குழுக்களை நியமித்தார். 

அதில் ஒரு குழுவின் அறிக்கை இன்று அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த குழு சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்டிருந்தது 

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட இரண்டாவது குழுவின் அறிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment