விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்!

273 0

முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். 

முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 27 ஆண்களாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் நளினி முருகன் சந்திப்பு நேற்று காலை நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு முருகன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினி முருகன் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் தனது உண்ணாவிரதத்தை முருகன் தொடங்கினார். இரவு உணவும் அவர் சாப்பிடவில்லை.

2-வது நாளாக இன்று காலையிலும் அவர் உணவு சாப்பிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தங்களது விடுதலையை முன் வைத்து முருகன் உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.

தங்களது மனுவின் மீது கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான மனுவையும் அவர் சிறை நிர்வாகத்திடம் அளித்துள்ளார் என்றனர்.

Leave a comment