அரசியலமைப்பு தொடர்பில் சிலர் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்- ரணில்

259 0

அரசியலமைப்பு தொடர்பில் எதுவித அறிவும் இல்லாத எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக கூறி போலிப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

காலி கராங்கொட யக்கலமுல்ல ஸ்ரீ சுப்பாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட சங்க சபை மற்றும் அறநெறி பாடசாலை கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். 

நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒற்றையாட்சியை பாதுகாத்து சமர்ப்பிக்கப்படும் எத்தகைய வேலைத்திட்டத்திற்கும் தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பிரதமர் கூறினார். 

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ள கூற்றுத் தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

அரசியல் யாப்பு தொடர்பில் சிலர் அடிப்படைக்கு விரோதமான முறையில் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் மஹாநாயக்கர் இந்த கருத்தை தெரிவிப்பது மிகவும் முக்கியமானது என்றும் பிரதமர் கூறினார். புதிய அரசியல் யாப்பு ஒன்று அல்லது அதன் திருத்த சட்டமூலம் இதுவரையில் தயாரிக்கப்படவில்லை. இதற்காக பாராளுமன்றத்தை கூட்டி அரசியல் யாப்பு சபையாக அமைத்து அனைத்து கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்பாட்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைமைப் பொறுப்பை நான் வகிக்கின்றேன். இதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து ஆலோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்ட இடைக்கால அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கை தற்பொழுது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு திருத்த சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையாகும். அவ்வாறான ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

டி.எஸ்.சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாஸ மற்றும் டி.பி.விஜயதுங்க ஆகியோரும் ஒற்றையாட்சி நிலைப்பாட்டிலேயே இருந்தனர். அந்த நிலைப்பாட்டிலேயே தானும் இருப்பதாக பிரதமர் கூறினார். 

Leave a comment