திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

316 0

தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள உலக வாழ் பௌத்த மக்களின் மரபுரிமையான புனித தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்கும் நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. 

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த பௌத்த சமயத்தை உலக மக்களுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் மிகச் சரியாக பாதுகாத்து வழங்கும் நோக்குடன் மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் புனித தேரவாத திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக்கும் தேசிய நிகழ்வு 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாத்தளை அலுவிகாரையில் இடம்பெற்றது. 

அந்த நிகழ்வில் திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தியதைப்போன்று அதனை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான தலையீட்டை தான் மேற்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததற்கு ஏற்ப, அதற்கான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதியினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

அந்த வகையில் அந்த முன்மொழிவுக்கு இன்று (14) அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், விரைவில் அது பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

இதேநேரம் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் தலையீடு பற்றி வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கும் கலந்துரையாடலொன்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவின் தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இதற்காக தேரவாத பௌத்த சமயத்தை பின்பற்றும் நாடுகளிலுள்ள 14 தூதுவராலயங்களை சேர்ந்த தூதுவர்கள் வருகை தந்திருந்தனர். உலக வாழ் பௌத்த மக்களின் மரபுரிமையான புனித தேரவாத திரிபீடகத்தை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் தலைமையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி தூதுவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

மேலும் இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் தாம் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a comment