அடுத்த மாதம் முதல் அனைவருக்கும் இ-ஹெல்த்கார்ட்!

290 0

நாட்டில் சுமார் இரண்டு கோடி மக்களுக்கு இ-ஹெல்த்கார்ட்களை வழங்கும் நடவடிக்கை அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 

களுத்துறை பெரியாஸ்பத்திரி மற்றும் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலைகளில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஏழுமாதங்களில் சகல மக்களுக்கும் இ-ஹெல்த்கார்ட்களை வழங்குவது இலக்காகும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் 71ஆ வது ஆண்டு நிறைவு நிகழ்வின்போது, இ-ஹெல்த்கார்ட்கள் இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இ-ஹெல்த்கார்ட்டில் நோயாளர்களின் முழுமையான மருத்துவ அறிக்கை உள்ளடக்கப்பட்டிருக்கும். அதன்படி, நோயாளர்களுக்கு நாட்டின் எந்தப் பிரதேச வைத்தியர்களிடமும் விரைவாக சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும். நவீன தொழில் நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஊடாக பொதுமக்களுக்கு விரைவாக சேவையை வழங்குவதே தமது நோக்கம் என்றும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார். 

Leave a comment