ஜே.வி.பி.யினர் ஏற்படுத்திய அழிவுக்கு மன்னிப்புக் கோரவேண்டும் – ஜனநாயக இடதுசாரி முன்னணி

250 0

மாகாணசபை முறைமையை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது அதன் அதிகாரங்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. அத்துடன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் இடம்பெறும்போது நாட்டில் அவர்கள் ஏற்படுத்திய அழிவுக்கு மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தி, மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அன்று மாகாணசபைகளை ஏற்படுத்தி அதற்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்போது மக்கள் விடுதலை முன்னணி நாட்டில் பாரிய குழப்பங்களை ஏற்படுத்தி வந்தது.

ஆனால் இன்று மாகாணசபைகளின் அதிகாரங்களை அதிகரிக்கவேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து நாட்டில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்திய இவர்கள், தற்போது அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படுத்தவேண்டும். அத்துடன் அன்று நாட்டில் ஏற்படுத்திய குழப்பத்துக்காக நாட்டு மக்களிடம்  மன்னிப்புகோரவேண்டும்.

மேலும் மக்கள் விடுதலை முன்னணியை இந்த அரசாங்கத்தின் பங்காளியாகவே பார்க்கின்றோம். பகிரங்கமாக அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோதும் மறைமுகமாக ஆதரித்து வருகின்றது. அவர்களின் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும். புதிய அரசியலமைப்பு விடயத்திலும் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இல்லை.

அதனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் மூலம் மாகாணசபை முறைமையை எதிர்த்து வந்த மக்கள் விடுதலை முன்னணி தற்போது மாகாணங்களுக்கான அதிகாரங்களை அதிகரிக்கவேண்டும் என தெரிவிக்கின்றது. அவர்கள் இந்த நிலைப்பாடு கடந்தகால நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளதா என்பதை தெரிவிக்கவேண்டும் என்றார்.

Leave a comment