தேசியவாதத்தையே உலகம் அரவணைக்கின்றது – கோத்தபாய

490 0

ஆசியாவில் நாடுகளை அபிவிருத்தி செய்த பல தலைவர்கள் தேசியவாதத்தில் தங்களது வேர்களைக் கொண்டவர்களே. தாராள ஜனநாயகம் உலகம் பூராவும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இப்போது உலகளாவிய ரீதியில் மக்கள் தேசியவாதத்தையே அரவணைக்கிறார்கள் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.

பத்தரமுல்லையில் வோட்டர்ஸ் எட்ஜ்  ஹோட்டலில் வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ வியத்மகா  ‘ நிகழ்வில் உரையாற்றிய அவர்  ” நாட்டில் இருப்பவர்களைக் காட்டிலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தேசியவாதம் குறித்து பேரார்வம் கொண்டவர்களாக இருக்கிார்கள். 

அவர்கள் உலகத்தை பார்க்கிறார்கள். உலக அரங்கில் இடம்பெறுகின்றவற்றை நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள். தேசியவாதத்தின் விழுமியங்களையும் பெறுமதியையும் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் ” என்று குறிப்பிட்டார்.

” இனவாதத்துக்கு மேலாக நான் தேசியவாதத்தையே விரும்புகிறேன். ஆதரிக்கிறேன். தேசியவாதம் என்பது சகல தரப்பினரையும் அரவணைக்கின்ற சிந்தனைப்போக்கையும் சகலரும் சமத்துவமான உரிமைகளையும் வாய்ப்புக்களையும் பெற உரித்துடையவர்கள் என்ற எண்ணத்தயைும் அடிப்படையாகக்கொண்டதாகும். அதேவேளை இனவாதம் என்பது மக்கள் சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்குகின்ற சிந்தனையாகும் என்பதே எனது அபிப்பிராயம். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையர்கள் தேசியவாதத்தையே அரவணைக்கவேண்டும். இந்தச் செய்தியை இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாட்டு மக்கள் மத்தியில் பரப்பவேண்டியது அவசியமானதாகும்.

” ஏனைய பல நாடுகளைப் போன்றே இலங்கையிலும் தேசியவாதமும் இனவாதமும் ஒன்றே என்று குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். அது அவ்வாறில்லை.உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கை முன்னோக்கிச் செல்லவேண்டுமானால், முதலில் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்பவேண்டும்.நாட்டில் பலரின் எதிர்யார்ப்பும் இதுவாகவே இருக்கிறது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், இந்துக்கள் அல்லது கிறிஸ்தவர்கள் எல்லோரும் முதலில் இலங்கையர்களே. இலங்கையர் என்ற இந்த அடையாளத்துக்கு நாம் வலுவூட்டவேண்டும்.இலங்கையர்களாக முன்னோக்கிச் செல்லவே நாம் எல்லோரும் விரும்புகின்றோம்.இந்தச் சிந்தனையை மக்கள் மத்தியில் நாம் கொண்டுசெல்லவேண்டும்.

” புதிய அரசியலமைப்பு ஒன்று பற்றி இலங்கையில் இன்று தீவிரமாக  வாதப்பிரதிவாதங்கள் மூண்டிருக்கின்றன. இது தொடர்பில் பலவேறு சிந்தனைகளும் கருத்துக்களும் வெளிப்படுத்தப்படுகிறது.புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் அபாயத்தைக்கொண்டிருக்கின்றது என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த விவகாரத்தை நோக்குவதை விடுத்து சகல மக்களும் இலங்கையர்களே என்று தங்களை அடையாளப்படுத்துகின்ற ஒரு நிலைக்கு மக்களைக் கொண்டுசெல்லவேண்டிய தேவை குறித்து அக்கறைப்படுவோம்.

” தனிப்பட்டவர்களின் உரிமைகள் பற்றியே கூடுதலான நேரம் விவாதிக்கப்படுகிறது.தனிப்பட்ட உரிமைகள் தேவையே.ஆனால் ஒரு சமூகம் என்ற வகையில் நாம் வறுமையைப் பற்றி பேசுவதில்லை. அது மிகவும்  முக்கியமான ஒரு பிரச்சினையாகும்.எமது அரசியல்வாதிகள் சமத்துவத்தை தோற்றுவிப்பதற்கான தேவை பற்றி பேசுவதில்லை.மேற்குலகினால் பரப்பப்பட்ட ஜனநாயக வகை தனிப்பட்டவர்களின் உரிமைகள் மீதே கவனத்தைக் குவித்திருக்கிறது.

” இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்குவது முக்கியமானதாகும்.ஏனைய ஆசிய நாடுகளின் தலைவர்கள் ஆட்சியதிகாரத்துக்கு வருவதற்கு இதே தந்திரோபாயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் தங்களது தேசங்களைக் கட்டியெழுப்புவதற்கானன ஒரு கோட்பாட்டின் அங்கமாக இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆசியாவில் வெற்றிகரமான ஒவ்வொரு தலைவரும் தேசியவாதத்தை மக்கள் மத்தியில் கொண்டுசென்று அபிவிருத்தி இலக்குகளைச் சாதிப்பதற்கு அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எமது நாட்டையும் அத்தகைய அணுகுமுறையின் மூலமாக மாத்திரமே அபிவிருத்தி செய்யமுடியும்.

” தனிநபர் உரிமைகளுக்கு மேலாக சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படவேண்டியதன் அவசியத்துக்காக தொழில்சார் நிபுணர்கள் குரல்கொடுக்கவேண்டும்.வியத்மகா ஊடாக இலக்குகளை அடைவதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்” எனத் தெரிவித்தார்.

Leave a comment