நாடு எதிர்நோக்கக் கூடாத மோசமானதொரு யுகம் உருவாகும்- TNA

72 0

பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு, சர்வஜன வாக்கெடுப்பின் போது மக்களால் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காக பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிதாக தயாரிக்கப்படும் அரசியலமைப்பானது பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளின் ஒப்புதல் மாத்திரமன்றி சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் கைவிடப்படுமாயின் அது நாடு எதிர்நோக்கக் கூடாத மோசமானதொரு யுகத்தின் ஆரம்பமாக அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் காலத்தில் அரசியலமைப்பை புதிதாக தயாரிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இவை வெற்றியளித்திருக்காத போதும் தற்பொழுது மீண்டும் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் அரசியலமைப்பானது சகல தரப்பினரினதும் ஒப்புதலைப் பெற்றதுடன், மக்களின் ஒப்புதலைப் பெற்றதாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (11) நடைபெற்ற அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். 

Leave a comment

Your email address will not be published.