சமயோசித செயற்பாட்டின் அவசியமும் அவசரமும் – பி.மாணிக்கவாசகம்

372 0

குழப்பத்திற்குள் குழப்பம். அந்த அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து குழம்பிப் போக முடியாது. அதில் இருந்து மீள்வது எப்படி என்பதுதான் கேள்வி.

ஒக்டோபர் 26 இல் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடி என்பது முதலாவது குழப்பம். ஐம்பத்திரண்டு நாட்கள் நீடித்த அந்தக் குழப்பத்திற்கு, அக்டோபர் 26 ஆம் திகதிக்கு முந்திய அரசியல் நிலைமையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காய் நகர்த்தல்களை மேற்கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் ஒரு முடிவேற்பட்டது.

இரண்டு பிரதமர்கள், இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற இரட்டை நிலையில், நாட்டில் அரசாங்கமே இல்லை என்ற விநோதமானதோர் அரசியல் நிலைமை உருவாகியிருந்தது. இது அக்டோபர் 26 நெருக்கடி தந்த அலங்கோலமானதோர் அவல நிலை.
இந்த அரசியல் குழப்ப நிலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பது இப்போது உரிமை கோரலுடன் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகிய ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து, ஐக்கிய மக்கள் சுதந்திரன முன்னணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டது என்பதை அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க, திலங்க சுமதிபால, லக்ஸ்மன் வசந்த பெரேரா ஆகியோர் இணைந்து மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் திட்டத்தை வகுத்ததாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தங்களுடைய திட்டம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாட்டினால் தவிடுபொடியாக்கப்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ள டிலான் பெரேரா, கூட்டமைப்பின் இந்தச் செயற்பாட்டினால் தமிழ் மக்களுக்கு எந்த நல்லதும் கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கூற்றில் அரசியல் ரீதியான ஆதங்கம், சீற்றம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கே சாபமிடும் ஓர் உணர்வும் வெளிப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார பலத்தைப் பிரயோகித்து அரங்கேற்றிய அக்டோபர் 26 அரசியல் மாற்றம் என்பது, அரச தரப்பினரால்,; அதி உயர் அதிகார பலத்தைக் கொண்ட ஒருவரினால் அரங்கேற்றப்பட்ட அரசியல் சதி முயற்சியாகும்.

முழு நாட்டையும் மோசமான நெருக்கடிக்குள் தள்ளி, அரசாங்கமே இல்லாத நிலைமைக்கு ஆளாக்கிய அந்த சதித்திட்டத்தை, தாங்களே உருவாக்கியதாக டிலான் பெரேரா மார்தட்டியுள்ளார். அந்தத் திட்டத்தைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பே முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவருடைய கூற்றில், டிலான் பெரேராவைச் சேர்ந்தவர்களுடைய ஆற்றாமையும், அவர்கள் சந்தித்த அரசியல் தோல்வியும்கூட ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக வெளிவந்திருக்கின்றது.

அரசியலில் அதிகாரத்தையும், சுயலாபத்தையும் அடைவதே தங்களுடைய நோக்கம் என்பதை அவர் எந்தவிதக் கூச்சமுமின்றி வெளிப்படுத்தியிருக்கின்றார். அவருடைய கூற்று இந்த நாட்டின் பேரினவாத அரசியல் தலைமைகளின் நாட்டுப்பற்றற்ற, மக்கள் மீ:து அபிமானமற்ற வக்கரித்துப் போயுள்ள அரசியல் கொள்கையையும் செயற்பாடுகளையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

அக்டோபர் 26 இல் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடி நீதிமன்றத்தின் ஊடாகத் தணிக்கப்படடு, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், நிலைமை திருப்தி அடையத்தக்க வகையில் சீரடையவில்லை. அவருடைய பொறுப்பில் நாடாளுமன்றத் தலைமையைக் கொண்டுள்ள அரசாங்கத்தை சீராகச் செயற்பட அனுமதிக்கக் கூடாது என்ற அணுகுமுறையுடன் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
நடவடிக்கைகள் இரண்டாவது குழப்பமாகக் காணப்படுகின்றது.

நீறுபூத்த நெருப்பின் நிலை

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் செயற்பாடுகளை விரும்பாமல், அவற்றுக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னால் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடி உச்சகட்டத்தை எட்டி இருந்தபோது, நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் 225 பிரதிநிதிகளும் ஒப்புதல் அளித்தாலும்கூட, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என்று சூளுரைத்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து, நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் விடுத்தது, அரசியலமைப்புச் சட்டங்களுக்கு முரணானவை என நீதிமன்றம் அவருக்கு எதிராக அளித்துள்ள தீர்ப்பு, அதிகார ரீதியிலான அவருடைய நிலைப்பாட்டைத் தகர்த்தெறிந்துவிட்டது. இதனையடுத்து, வேறு வழியின்றி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்.

ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க மீதான அவருடைய அரசியல் ரீதியான கோபமும், காழ்ப்புணர்வும் நீங்கவில்லை. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகிய மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் அணிசேர்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பலமுள்ள ஓர் அரசியல் எதிர்சக்தியை உருவாக்குவதே இந்த முயற்சியின் அடிப்படை நோக்கமாகும். மறுபக்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நல்ல முறையில் ஆட்சி புரிய முடியாத வகையில் பல்வேறு தடைளை ஏற்படுத்துவதிலும் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அமைச்சுக்களைப் பங்கிடுவதில் பாகுபாடு காட்டியுள்ள அதேவேளை, அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் எவரும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான போக்குடையவர்களாக இருக்கக் கூடாது என்பதிலும் அவர் கூர்மையாகச் செயற்பட்டு வருகின்hறார்.

இதனால் பெயரளவில் மட்டுமே அரசாங்கத்தைச் செயற்படுத்த முடியும் என்ற நிலைமைக்கு ரணில் விக்கிரமசிங்க தள்ளப்பட்டுள்ளார். முக்கியமான செயற்பாடுகள் கடமைகள், நிறைவேற்றுப் பொறுப்புக்கள் என்பவற்றை, தன்னுடைய நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிNசுன, ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் நிறைவேறிவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதையும் காண முடிகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் சட்டவாட்சி அதிகார தத்துவத்தை உடைய பிரதமரும் அரசியலில் கீரியும் பாம்பும் போன்ற பகைமை சார்ந்த ஆட்சிப் போக்கில் அரசாங்கத்தை எத்தனை நாட்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பது கேள்விக்கு உரியது. ஏட்டிக்குப் போட்டியான இந்த அரசியல் முரண்பாட்டு நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மக்கள் நன்மை அடைய முடியாது. அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் இயலாத காரியமாகவே இருக்கும். இது ஒரு மோசமான குழப்ப நிலை.

நாடு சீரான ஆட்சியின் மூலம் வழிநடத்தப்பட வேண்டுமானால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், சட்டவாட்சி அதிகாரத்தைக் கொண்ட நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பான பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும். இணக்க அரசியல் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் கொண்டவர்களாக இருக்க வேண்டியது முக்கியம்.

கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும்கூட, நாட்டை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும். மக்களுக்கு விசுவாசமாகவும், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு நல்லாட்சி புரிய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் கூடிய செயல் மனப்பாங்கு இருத்தல் வேண்டும். இத்தகைய இணைந்த நிலைப்பாடும் செயற்திறன் மிக்க ஆட்சியைக் கொண்டு நடத்த வேண்டும் என்ற அரசியல் ரீதியான ஆர்வமும் இல்லையென்றால் நாடு முன்னேற முடியாது. நல்லாட்சி நிலவவும் மாட்டாது.

அக்டோபர் 26 நெருக்கடியின் பின்னர் நாட்டு நிலைமை சீரடைந்துள்ளதாகத் தோற்றிய போதிலும், நல்லாட்சி நிலவுவதற்கு உரிய அரசியல் உறுதிப்பாடு இன்னும் உருவாகவில்லை. எந்த வேளையிலும் முரண்பாடுகள் வெடித்து வெளிக்கிளம்பலாம் என்ற நீறு பூத்த நெருப்பாகவே அரசியல் நிலைமைகள் காணப்படுகின்றன.

புதிய அரசியலமைப்புக்கான மீள் முயற்சி

இந்த நிலையில், பொதுத் தேர்தல் ஒன்றின் மூலமே உறுதிப்பாடற்ற அரசியல் நிலைமைக்கு முடிவு காண முடியும் என்றே பலரும் நம்புகின்றார்கள். பெரும்பாலான அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்களின் மத்தியிலும்கூட இந்தக் கருத்தே மேலோங்கியிருக்கின்றது.

ஆனால், பொதுத் தேர்தல் நடத்துவதற்குரிய காலம் இன்னும் கனியவில்லை. ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த கூட்டு அரசு, ஆட்சிப் பொறுப்பை ஏற்று நான்கரை வருடங்கள் ஆகும் வரையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை மீறி தேர்தல் நடத்த முடியாது. அரசியல் நெருக்கடியின்போது நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு இதனை இடித்துரைத்திருக்கின்றது.

அதேவேளை, இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையில் நிலுவையில் உள்ள மாகாணசபைக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும், அரசியல் உறுதிப்பாட்டை நிறுவுவதற்கு அது உதவப் போவதில்லை. பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலின் மூலமே நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசியல் உறுதிப்பாட்டை உருவாக்க முடியும்.

எனவே, இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாகப் பரிணமித்துள்ள ஒரு சூழலில் தேர்தலை முன்னிறுத்தி அரசியல் தலைவர்களும், அரச தலைவர்களும் செயற்படுவார்கள் – செயற்படுகின்றார்கள் என்பதே யதார்த்தம். இந்த நிலையில், மோசமானதோர் அரசியல் நெருக்கடியின் பின்னர், மக்கள் நலன்களில் ஆட்சியாளர்களும், அரசியல் தலைவர்களும் கூடிய கவனம் செலுத்திச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

தேர்தலை முன்னிறுத்திச் செயற்படும் போது – அது, தங்களது சுய அரசியல் இலாபத்தை முதன்மைப்படுத்தியதாகவே இருக்கும். அப்போது, எதிரணியினரைத் தோற்கடிப்பதையே அரசியல்வாதிகள் பொதுவான இலக்காகக் கொண்டிருப்பார்கள். அதேவேளை, முரண்பாடுகள் முதன்மை பெற்றுள்ள அரசியல் சூழலில் எதிரணியினரை மக்களிடமிருந்து எந்த அளவுக்கு விலக்கி வைக்க முடியுமோ அந்த அளவுக்கு அவர்களை விலக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளே தீவிரம் பெற்றிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால், நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் தொல்லைகளில் இருந்து மீள்வது எப்படி என்பது அரசாங்கத்திற்கு பெரிய தலை இடியாக உள்ளது. எனவே, அரசியல் பேதங்களைக் கடந்து பொதுவான ஓர் இலக்கை நோக்கி பொதுவான ஒரு வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆயினும், அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இப்போதைய அரசியல் நிலைமை சாதகமான சூழலாக அமையவில்லை.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம், முக்கியமான மாற்றங்களையும், நன்மைகளையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுபதற்குரிய நடவடிக்கைகளிலும் ஒரு பக்கம் கவனம் செலுத்தப்படுகின்றது. இதற்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது.

ஆனால் ஒன்றையொன்று கடித்துக் குதறும் அளவுக்கு, முரண்பாடான அரசியல் உணர்வுகள் மேலோங்கியுள்ள அரசியல் சூழலில் அந்தத் தேவை நிறைவேறும் என்று கூறுவதற்கில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தும் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து விடயங்களை விவாதிப்பதற்கும், நாட்டின் பொதுவான நலன்களைக் கருத்;திற்கொண்டு விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்கும் தற்போதைய அரசியல் சூழலில் தயாராக முடியும் என்று நம்புவதற்கில்லை.

உணர்வு ரீதியாக அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் வேறுபட்டிருக்கின்ற நிலைமைக்கு அப்பால், பொது இலக்காகிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு உளப்பூர்வமாக அரசியல் கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

சமயோசித போக்கும், இராஜதந்திரமும் அவசியம்

தேசிய அளவிலான, இரண்டு பேரின அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து 2015 ஆம் ஆண்டு அமைத்த அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தேவை முக்கியமாகக் கருதப்பட்டது. தேர்தல் முறையில் மாற்றம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார உரித்துக்களை மட்டுப்படுத்தி, பிரதமரின் கரத்தைப் பலப்படுத்துவது ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக பேரின அரசியல் கட்சிகள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆர்வம் கொண்டிருந்தன.

ஆனால் இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளித்து ஒத்துழைத்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு 2015 ஆம் ஆண்டு முன்வந்திருந்த கூட்டமைப்பு, நிபந்தனையற்ற ஆதரவையே வழங்கியிருந்தது. ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், அதற்குப் பதிலாக அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு நிபந்தனையாக முன்வைத்திருக்கவில்லை.

ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு முன்னின்று செயற்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க, பொது வேட்பாளராகக் களம் இறங்குவதற்கு உடன்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன ஆகியோர், அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசியல் ரீதியான அவசியத்தை உணர்ந்திருந்தனர். எனவேதான், இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இணங்கியிருந்தனர்.

ஆனால் இரு கட்சிகளும் இணைந்து உருவாக்கியிருந்த நல்லாட்சி அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும் அழைக்கப்பட்ட அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, மோசமானதோர் அரசியல் நெருக்கடியின் பின்னர், ஏட்டிக்குப் போட்டியான ஒரு நிலைமையில், நிர்ப்பந்தமான ஒரு சூழலில் தனித்து ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி முன்வருமா என்பது கேள்விக்குறியே.

இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்காக, தாங்கள் திட்டமிட்டு முன்னெடுத்திருந்த அக்டோபர் 26 ஆட்சி மாற்றத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முறியடித்ததன் காரணமாக, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கமாட்டாது. அதற்குத் தாங்கள் ஒத்துழைக்கப் போவதில்லை. அதற்கு எதிர்;ப்பு தெரிவிப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளமை தமிழர் தரப்பு அரசியலில் முக்கியமாகக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் அவசரமான அரசியல் தேவையாகும். யுத்தம் முடிவுக்கு வந்து, பத்து வருடங்களாகின்ற நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளனர். யுத்தம் மூள்வதற்கு மூலகாரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினைக்கு, நிரந்தரமானதோர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டகால அரசியல் அபிலாசையாகும். ஆனால் இத்தகைய அரசியல் அவசரமும், முக்கியமும் சிங்கள மக்களுக்குக் கிடையாது. அதேபோன்று பேரின அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அந்த அரசியல் தேவை இல்லையென்றே கூற வேண்டும்.

இதன் காரணமாகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன மட்டுமல்லாமல், ஜேவிபி போன்ற கட்சிகளும்கூட புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஆர்வமற்றவையாகவும், எதிர்ப்புணர்வு கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இந்த நிலையில்; தற்போதைய உறுதியற்ற அரசியல் சூழலையும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையற்ற பலவீனமான நிலைமையையும் கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மூலம் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர முடியும் என்று கூறுவதற்கில்லை.

உறுதியற்ற அரசியல் நிலைமையையும், எதிர்ப்பு அலைகளையும், தேவையான அரசியல் பலமில்லாத நிலையையும் கொண்டு, தேர்தல் சூழல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது கடினம். ஆயினும் அத்தகைய அரசியல் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகின்ற வகையில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதையும் காண முடிகின்றது.

அரசியல் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும் என்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார். அவருடைய கருத்து மறுப்புக்குரியதல்ல. எனினும் கால நேர அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையிலேயே நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும். செயற்படவும் முடியும்.

சாதகமற்ற சூழலில் சமயோசிதமாகவும், இராஜதந்திர ரீதியிலும் நிலைமைகளைக் கையாள்வது அவசியம். நிலைமைகளை சாதகமாகப் பயன்படுத்துவதற்கு, செயற்திறனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதும் அவசியம். அத்தகைய செயற்பாடுகளின் ஊடாகவே குழப்பகரமானதோர் அரசியல் சூழலில் நிலைமைகளைச் சீர் செய்து இலக்குகளை நோக்கிப் பணிக்க முடியும்.

Leave a comment