வடபுலத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் – அனந்தி

271 0

மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இராணுவம் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனித புதை குழி தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்… 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மிக நீண்ட வரலாறு இந்த மண்ணிற்கு உண்டு. மன்னார் புதைகுழி என்பது மனித குலத்திற்கு ஏதிரான மனங்களை உலுக்குகின்ற சம்பவமாக உள்ளது. குறிப்பாக 26 ற்கு மேற்பட்ட குழந்தைகளுடைய உலும்புக் கூடுகள் அங்கு மீட்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்ல இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட எலும்புக் கூடுகளும் அங்கு மீட்கப்பட்டுள்ளது. 

இந்த அகழ்வுக்கு சர்வதேச மத்தியஸ்தம் வேண்டும். ஏனெனில் இலங்கையில் அரசில் தமிழர்களுக்கு நம்கிக்கை இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து பகுதிகளிலும் மனித புதைகுழிகள் உள்ளன. எனவே இராணுவம் நிலை கொண்டிருந்த பகுதிகளிலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். 

ஏனெனில் ஏராளமான மக்கள் காணாமல் போயுள்ளார்கள். எங்களிடம் சரியான புள்ளிவிபரங்கள் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கிளி பாதர் இருந்த வரையிலான கணிப்பீடு ஒன்று உள்ளது. அதுதவிர வேறு புள்ளிவிபரங்கள் இல்லை. 

இன்று கூட இந்திய இராணுவத்தின் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடலில் வைத்தும், வீடுகளில் வைத்தும் தமது உறவுகள் காணாமல் போயுள்ளார்கள் என்று என்னிடத்தில் வந்து பதிவு செய்கின்றவர்கள் உள்ளார்கள். 

சர்வதேச நாடுகளின் உதவிகளை நாட வேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளார்கள். ஏனெனில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் போன தமது உறவுகளில் எச்சங்களாக இருக்கலாம் என்று அஞ்சுகின்றார்கள். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மண்டைதீவு உட்பட மேலும் பல தீவுகளில் மனித புதை குழி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசியல் தலைவர்களும், பொது அமைப்புக்களும் சர்வதேச உதவியினை நாட வேண்டும் என்றார்.

Leave a comment