சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்துக்கு எதிராக சதி செய்யவில்லை!

221 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பநிலை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்ற சூழ்நிலையில், கட்சியைப் பிளவுபடுத்துவதற்கான சதிமுயற்சியொன்றில் தான் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் றெஜினோல்ட் குரே மறுத்திருக்கிறார்.

கடுவெல மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜி.எச்.புத்ததாச கூறியிருப்பதைப் போன்று சதிமுயற்சியில் ஈடுபடவில்லை என்று ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கும் குரே, தன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தைப; பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒன்பது மாகாணங்களில் ஐந்து மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்த ஜனாதிபதி சிறிசேன கடந்த டிசம்பர் 31 வரை வடமாகாண ஆளுநராகப் பதவிவகித்த குரேயைத் தவிர்த்திருந்தார். தலைமைத்துவத்துக்கு எதிராகக் கிளம்பியிருப்பதாகக் கூறப்படும் கட்சியின் 18 எம்.பி.க்களின் செயற்பாடுகளுக்கு அனுசரணையாக குரே இயங்குகின்றார் என்று கட்சியின் 6 தொகுதிகளின் அமைப்பாளர்கள் குழுவொன்றினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்குப் பதிலளிக்குமுகமாகவே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

‘ நான் மௌனமாக இருப்பதை பயன்படுத்தி பல பொய்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. 18 எம்பி.க்களுக்கும் பின்னணியில் நான் இருப்பதாக கடுவெல முன்னாள் மேயர புத்ததாச கூறியிருக்கிறார். 

எனது வளாகத்தில் இடம்பெற்ற கூட்டம் எந்தவொரு சதித்திட்டத்தையும் தீட்டுவதற்கு பயன்படுத்தப்படுவதற்கு நான் அனுமதிக்கவில்லை என்பதை திட்டவட்டமாகக் கூறுகிறேன். காட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் நான் கையெழுத்துக்களைப் பெறவில்லை. 

நான் அந்தளவுக்கு அபத்தமான காரியங்களில் ஈடுபடுபவனில்லை. கூட்டத்தைப் பற்றி கேட்டபோது முதலில் நான் பெயர்களை எஸ்.பி.திசாநாயக்கவிடமே கொடுத்தேன்.பிறகு ஜனாதிபதியிடம் கொடுத்தேன்’ என்று வடக்கின் முன்னாள் ஆளுநர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்கவுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று கூறிய குரே, எந்தச் சூழ்நிலையிலும் சுதந்திரக் கட்சியை விட்டு விலகப்போவதில்லை என்றும் எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கு கட்சியுடன் உறுதியாக நிற்கப்போவதாகவும் குரே குறிப்பிட்டிருக்கிறார்.

பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் கட்சியின் யோசனையை உறுதியாக ஆதரப்பதாகக்கூறிய அவர் ஜனாதிபதி சிறிசேனவின் தலைமைக் பக்கபலமாக இருக்கப்போவதாகவும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


Leave a comment