பொதுத்துறை நிறுவனத்துக்காக முதலை கண்ணீர் வடிப்பதா?

191 0

கமிஷன் பணம் கிடைக்காததால்தான் ‘ரபேல்’ விமான பேரத்தை காங்கிரஸ் கைவிட்டது, பொதுத்துறை நிறுவனத்துக்காக அது முதலை கண்ணீர் வடிக்கிறது என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற மக்களவையில், ரபேல் விமான பேரம் குறித்த விவாதத்துக்கு நேற்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-

இந்தியாவை சுற்றியுள்ள சூழ்நிலை, நமக்கு கவலை தருவதாக உள்ளது. அண்டை நாடுகள் விமான பலத்தை பெருக்கி வருகின்றன. மோடி அரசுக்கு தேச பாதுகாப்பு முக்கியம். எனவே, முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களும், வெடிபொருட்களும் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும்.

ஆனால், காங்கிரசுக்கு தேச பாதுகாப்பு குறித்த அக்கறை இல்லை. விமானப்படை பாதிக்கப்படுவது பற்றியும் கவலைப்படவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில், ரபேல் போர் விமானம் வாங்க பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அது அவர்களுக்கு பொருத்தமானதாக இல்லை. கமிஷன் பணம் கிடைக்காததால், அந்த பேரத்தை நிறுத்தி விட்டனர். ரபேல் விமானத்தை தயாரிப்பதற்கான, இந்திய கூட்டு நிறுவனமாக பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டை (எச்.ஏ.எல்.) தேர்வு செய்யாதது ஏன் என்று கேட்கிறார்கள். ரபேல் போர் விமானத்தை தயாரிக்கும் அளவுக்கு எச்.ஏ.எல்.லிடம் மனித உழைப்பு நேரம் இல்லை. அதன் திறன் குறித்து டசால்ட் நிறுவனம் உத்தரவாதம் அளிக்க மறுத்து விட்டது.

இவ்வளவு பேசும் காங்கிரசார், அவர்களது ஆட்சியில் எச்.ஏ.எல்லின் திறனை மேம்படுத்த முதலீடு செய்யாதது ஏன்? அதை எப்படி மேம்படுத்தலாம் என்று நிபுணர்களிடம் கருத்து கேட்டார்களா? எதுவுமே இல்லை. ஆனால், மோடி அரசு, எச்.ஏ.எல்லுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பணிகளை அளித்துள்ளது.

ஹெலிகாப்டர் வாங்க அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் காங்கிரஸ் ஆட்சியில் போட்ட ஒப்பந்தத்தை எச்.ஏ.எல்லுடன் போட்டு இருக்கலாமே? கமிஷன் கிடைக்காது என்பதால் போடவில்லையோ? எனவே, எச்.ஏ.எல். குறித்து காங்கிரசார் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்.

ரபேல் விமானங்கள் எண்ணிக்கையை 126-ல் இருந்து 36 ஆக குறைத்து விட்டதாக மக்களை காங்கிரசார் திசைதிருப்புகிறார்கள். பறக்கும் நிலையில் 18 விமானங்களை வாங்குவதற்குத்தான் காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிடப்பட்டது. அந்த எண்ணிக்கையை நாங்கள் 36 ஆக உயர்த்தி உள்ளோம். ஏனென்றால், அவசர நிலையை கருதி, விமானப்படை இருமடங்கு போர் விமானங்களை கேட்டது.

ரபேல் ஒப்பந்தம், 2016-ம் ஆண்டு போடப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது இந்த ஆண்டு, முதலாவது விமானம், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். கடைசி விமானம், 2022-ம் ஆண்டு ஒப்படைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.

இதற்கிடையே, நிர்மலா சீதாராமனின் பதிலுரைக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி ‘டுவிட்டர்’ பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

சிறப்பான பதிலுக்காக பாராட்டுகள், நிர்மலா சீதாராமன்ஜி. பொய் பிரசாரத்தை தகர்த்து விட்டீர்கள். உங்கள் பணியால் பெருமைப்படுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment