‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், ‘கஜா’ புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இதை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டுவந்தனர்.
தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசியதாவது:-
துரைசந்திரசேகரன் (தி.மு.க.):- கஜா புயல் தாக்குதலால் டெல்டா மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போதிய நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை. எனவே, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தமிழக அரசு நிதி பெற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தொகை போதாது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.
சி.வி.சேகர் (அ.தி.மு.க.):- பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் மின் இணைப்பு சீராக வழங்கப்படவில்லை. அதிக அளவு ஊழியர்களை வரவழைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தென்னங்கன்றுகளை வழங்கி, 5 ஆண்டு பராமரிப்பு செலவையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். உடைந்துபோன படகுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):- 50 நாட்கள் ஆகியும் பல கிராமங்களுக்கு இன்னும் அரசின் நிவாரண உதவிகள் செல்லவில்லை. மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீடு தொகை கேட்டும், ரூ.1,400 கோடி அளவுக்குத்தான் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசு போராடி மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற வேண்டும். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நிதியை அளிக்கப்போகிறது என்ற விவரத்தை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
முகமது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்):- தமிழக அரசு கேட்ட நிதியில் 10 சதவீதத்தைகூட மத்திய அரசு வழங்கவில்லை. இனிவருங்காலங்களில் கடலோர பகுதிகளில் பேரிடர் மையத்தை அமைக்க வேண்டும். தன்னார்வலர்களையும் முறையாக ஒருங்கிணைக்க வேண்டும். சிறப்பு திட்டங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.
தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி):- சேதமடைந்த படகுகளை சீரமைக்க அரசு ரூ.85 ஆயிரம் தான் நிதியுதவி அறிவித்துள்ளது. அது போதாது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாயிகள் வங்கிகளில் வாங்கியிருக்கக்கூடிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். நானும் அதைத்தான் வலியுறுத்துகின்றேன்.
தேசிய மயமாக்கப்பட்டிருக்கக் கூடிய வங்கிகளில், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கக்கூடிய கடனை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசு தள்ளுபடி செய்வதற்கு முன்வர வேண்டும். விவசாயிகள் கடன் மட்டுமல்ல. மாணவர்கள் தங்களுடைய கல்விக்காக வங்கிகளில் வாங்கியிருக்கக்கூடிய கடன், பெண்கள் மகளிர் சுயஉதவி குழுவுக்காக வாங்கியிருக்கக்கூடிய கடன், நம்முடைய மீனவச் சமுதாயத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர் கள் படகுகளுக்காக வாங்கியிருக்கக்கூடிய அந்த கடன் என இந்த கடன்களை முழுமையாக இந்த அரசு ரத்து செய்வதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் பேசினார்கள்.


