பச்சரிசி, சர்க்கரை சிறப்பு தொகுப்புடன் குடும்பத்துக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு !

226 0

இந்த ஆண்டுக்கான, தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மரபுப்படி முதல் கூட்டத்தில் முதல் நாளில் கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி, உரை நிகழ்த்துவதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். அவரை சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டசபை கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சரியாக காலை 9.59 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூட்ட அரங்கத்துக்குள் வந்தார். அவருடன் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபாலும் வந்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் எழுந்து நின்று கவர்னருக்கு வணக்கம் தெரிவித்தனர். அவரும் பதில் வணக்கம் கூறினார். சபாநாயகர் இருக்கைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அவையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர்.

அதன்பின்னர், அனைவரும் இருக்கையில் அமர்ந்த பிறகு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை 10.01 மணிக்கு வாசிக்க தொடங்கினார். அவர் தனது பேச்சின் ஆரம்பத்தில் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். “அனைவருக்கும் காலை வணக்கம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். எளிமையான வாழ்க்கை வாழுங்கள். இதுவே ஊழலை அகற்றிவிடும். இதுவே எனது செய்தி” என்றார்.
அந்த நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து இடைமறித்து பேச முயன்றார். அப்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித், “நீங்கள் கூற விரும்பும் கருத்தை விவாதத்தின்போது பேசுங்கள்” என்று கூறிவிட்டு, தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார்.

ஆனாலும், கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாகவும், ஜெயலலிதா மரணம் குறித்தும் சில கருத்துகளை மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், அவருக்கு மைக் வழங்கப்படவில்லை. இதனால், தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று அவருக்கு மைக் இணைப்பு வழங்குமாறு கூறினார். மைக் இணைப்பு வழங்கப்படாத நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் 10.04 மணிக்கு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் வெளியேறினார்கள்.

அதன்பிறகு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

அவர் பேசியதாவது:-


இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு இலங்கை அரசிடம் இணக்கமாகப் பேசி இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

இந்த அரசின் அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது பாராட்டுக்குரியது. தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியோடு, குறைந்த விலையில் சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்குவதன் மூலம் பசிப்பிணி இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

பொது விநியோக திட்டத்தில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட விரிவான கணினிமயமாக்கல் திட்டத்தின் மூலம் போலி ரேஷன் அட்டைகளும், பன்முறை பயனாளி பதிவுகளும் அறவே அகற்றப்பட்டு உள்ளன. வெளிப்படையான, சீரான, பொது விநியோக திட்டத்தை உறுதி செய்வதற்காக, 2.01 கோடி குடும்பங்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது ஒரு பாராட்டுக்குரிய சாதனையாகும்.

பேரிடர் ஏற்பட்டபோது ஏழை-எளிய மக்களுக்கு நேசமுடன் உதவிக்கரம் நீட்டிய மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி, காவிரி வடிநிலப் பகுதிகளில் கஜா புயலினால் ஏற்பட்ட தாக்கத்தையும், வட மாவட்டங்களில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சியின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை இந்த அரசு வழங்க உள்ளது.
இதுதவிர, திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரூ.1,000 இந்த அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையேயான உயர்தள வழித்தடம், சென்னை-பெங்களூரு தொழில் வழித்தட திட்டம், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துவதற்கான திட்டம் ஆகியவை மாநிலத்துக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து துரிதமாக செயல்படுத்த, மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

ஜெர்மன் வங்கியின் உதவியுடன் போக்குவரத்துக் கழகங்களை மறுசீரமைக்க ஒரு விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. பழைய பஸ்களுக்கு பதிலாக எரிபொருள் செயல்திறன் மிக்க பி.எஸ்.-6 பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பஸ்களும் இத்திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும்.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள குடிசைப்பகுதிகளை மேம்படுத்த, உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டம் என்ற விரிவான வீட்டுவசதி வழங்கும் திட்டத்தை இந்த அரசு வடிவமைத்து உள்ளது. சென்னை பெருநகர பகுதிகளை தவிர்த்து, மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்றதொரு திட்டத்தை செயல்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியை இந்த அரசு நாடி உள்ளது.

விரைவில் கட்டிடங்களுக்கு பொது விதிமுறைகளுக்கான அறிவிக்கை செய்யப்பட உள்ளதால், கட்டுமான துறையில் எளிதில் தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் மேம்படும். குடியிருப்பு கட்டிடங்களுக்கு தரை பரப்புக் குறியீட்டை உயர்த்த அரசு எடுத்த முடிவால் வீட்டுவசதி வாய்ப்புகள் வாங்கத்தக்க விலைகளில் எளிதில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
கவர்னரின் ஆங்கில உரை காலை 10.53 மணி வரை நீடித்தது. கவர்னர் பேசி முடித்ததும், அவரது உரையை சபாநாயகர் ப.தனபால் தமிழில் வாசித்தார். காலை 10.55 மணிக்கு படிக்கத் தொடங்கிய அவர் 11.49 மணிக்கு வாசித்து முடித்தார். அதனைத் தொடர்ந்து, நாட்டுப்பண் ஒலிபரப்பப்பட்டது. அத்துடன் நேற்றைய கூட்டம் நிறைவு பெற்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே ஒரு லட்சம் பேருக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 58 ஆயிரத்து 238 பேருக்கு ரேஷன் அட்டைகள் உள்ளது.

தற்போது, திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டம் நீங்களாக ஏனைய 31 மாவட்டங்களில் உள்ள 1 கோடியே 97 லட்சத்து 41 ஆயிரத்து 762 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது. இதனால், அரசுக்கு ரூ.1,974 கோடியே 17 லட்சத்து 62 ஆயிரம் செலவு ஏற்படும்.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பிறகு, அந்த மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தொகுப்பில் உள்ள பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்களின் கொள்முதல் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு சிறிய அளவிலான காகித பையில் போட்டு தனித்தனியாக பொங்கல் பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன. அத்துடன் ரூ.1000 ரொக்கப் பணமும் காகித கவரில் போட்டு வழங்கப்பட உள்ளது.

பொங்கல் சிறப்பு தொகுப்பாக வழங்கப்படும் பொருட்களின் கொள்முதல் நடைபெற்று முடிய இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என தெரிகிறது. எனவே, அதன் பிறகே இந்த பொருட்கள் காகித கவரில் தனித்தனியாக அடைக்கப்படும். இந்த பணிகள் முடிய எப்படியும் 3 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

எனவே, 8-ந் தேதி சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு, அடுத்த சில நாட்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் இந்த திட்டத்தை தொடங்கிவைக்க இருக்கிறார். உடனேயே, ரேஷன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களும், ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்கப்பட இருக்கிறது.
பொருட்கள் மற்றும் பணத்தை பெற செல்பவர்களின் பெயர் கண்டிப்பாக அவர் கொண்டு செல்லும் ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருக்க வேண்டும். கையெழுத்து போட்டால் தான் அதை வாங்கவும் முடியும்.

திருவாரூர் மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.

Leave a comment