வருட ஆரம்ப நாளில் பிரதேச சபையில் ஆர்ப்பாட்டம்

482 0

நாடு தழுவிய ரீதியில் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றில் ஆண்டின் முதலாம் நாள் சேவை சத்தியப் பிரமாண நிகழ்வுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மட்டும் வித்தியாசமான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளரின் இடமாற்றத்தினைக் கண்டித்து அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் தரப்பு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களால் இன்று பிரதேச சபை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக செயற்பட்டு வந்த எம்.ஐ.எம்.பாயிஸை நிந்தவூர் பிரதேச சபைக்கு பதிற் செயலாளராக 2019.01.01 முதல் கடமைகளை பொறுப்பேற்குமாறு கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் எம்.டபள்யு.ஜி.திஸாநாயக்கவினால் ஒப்பமிட்டு மேற்படி இடமாற்றத்திற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ் இடமாற்றத்தினைக் கண்டித்தே மேற்படி கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் இடமாற்றத்தினைக் கண்டித்த கோஷங்களுடனும் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இது தவிர, பிரதேச சபையின் பிரதான நுழைவாயிலை மூடி இவ்வார்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டதனால் பிரதேச சபையின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையில் காணப்பட்டது. பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளவதில் சிக்கல் நிலை தோன்றியதால் அலுவலம் வெறிச்சோடிக்கிடந்தது.

‘செயலாளர் செய்த குற்றம் என்ன?’ வேண்டாம் வேண்டாம் அரசியல் பழிவாங்கல் வேண்டாம்’ வேண்டும் வேண்டும் இந்த செயலாளரே வேண்டும்’ ‘குழப்பாதே குழப்பாதே சீரான நிருவாகத்தினை குழப்பாதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்கார சபை உறுப்பினர்கள் ஏந்தியிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சமூகமளித்த தீகவாபி ரஜமகா விகாரை விகாராதிபதி போதிவல சிறிசந்தானந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவளித்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு இடமாற்றம் பெற்று வரும் புதிய செயலாளர் அடுத்த மாதம் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இருப்பதால் இவ்விடமாற்ற நடவடிக்கையானது முற்றுமுழுதான அரசியல் பழிவாங்கல் செயற்பாடென்றும் இவ்விடமாற்றத்தினை உடனடியாத இரத்துச் செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a comment