ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இழுபறி தொடர்ந்தால் அரசாங்காத்தை கொண்டு செல்ல முடியாது-இராதாகிருஷ்ணன்

218 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசியல் இழுபறி நிலை தொடருமானால் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியாத சூழ்நிலையே காணப்படும் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க கல்வி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மேலும், இவர்களுக்கு இடையில் நல்ல உறவினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டால் மாத்திரம் தான் இலங்கை நாட்டில் ஒரு சுபீட்சத்தை எதிர்பார்க்க முடியும் எனவும் முன்னாள் இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இன்று (30) ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க கல்வி அமைச்சர், நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சோபித்த தேரர் போன்றோர் நடுநிலை வகித்து செயற்பட்டால் மாத்திரமே இவர்களின் பிரச்சினைக்கு தீர்வினை காண முடியும். 

இன்று ஜனநாயக ரீதியில் அமைச்சு பதவி, பிரதமர் போன்ற பதவிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கபட்டு இருக்கிறது. நாட்டின் தலைவராக ஜனாதிபதி இருக்கிறார். ஆகவே, இவர்கள் இரண்டு பேரும் ஜனநாயக ரீதியிலே மக்களுடைய சேவையினை கருதி ஒன்று சேர்ந்தால் மீண்டும் இலங்கை மக்களுக்கு சுபீடசம் ஏற்படும். ஏன் எனில், ஒரு டொலரின் விலை 184 ரூபாவிற்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதிகரித்து கொண்டு செல்லுமானால் எமது வாழ்க்கை தரம் பாதிக்கபடும் எனவும் அவர் தெரிவித்தார். 

இன்று ஜனநாயகத்தை உறுதிபடுத்தபட்ட பிறகு ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து போன்ற நாடுகள் உதவியினை நல்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சென்று அவர்களோடு கலந்துரையாட வேண்டும் இதேவேளை, இன்று தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயம் தொடர்பில் ஒரு அரசியல் கட்சி மக்களுடைய வாக்குகளை பெற்று கொள்வதற்காக இந்த பிரச்சாரங்களை மேற்கொண்டது. 

ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்குவது என்பது கடினமான ஒரு விடயம் என்பதை முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளதோடு 600 ரூபா மாத்திரமே வழங்க முடியும் என கூறி இருக்கிறது. ஆனால் இவர்கள் கூறுகிறார்கள் ஆயிரம் ரூபா வாங்கி தருவதாக கூறுகிறார்கள். ஆனால் மக்களுக்கு ஒரு நியாயமான சம்பளத்தினை பெற்று கொடுப்பது ஒரு தொழிற்சங்கத்தின் கடமையாகும். 

எங்களுக்கு கெபினட் அமைச்சு பதவி வழங்குவதாக கூறி, இல்லை என்று சொல்லுவது எங்களை ஏமாற்றுவது போல் தான் நான் கருதுகிறேன். இன்று நேற்று அல்ல 1994 ஆம் ஆண்டு சந்திரசேகரன் அவர்கள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களோடு சேர்ந்து அதற்க்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த பொழுதும் கூட அவர் முழுமையான ஆதரவை கொடுத்து வந்து இருக்கிறார். 

ஆனால் ஒவ்வொரு முறையும் ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறான வேலைகளை செய்து கொண்டு தான் வருகிறார்கள். இந்த முறையும் இது புது விடயம் அல்ல. ஆனால் எனது அமைச்சு பதவி குறித்த தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவர்கள் வழங்கும் அழுத்தம் போதாது. தமிழ் முற்போக்கு கூட்டணியோடு நான் விலகுவதில்லை. ஆனால் தனிபட்ட கட்சி நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது அவர்கள் தனிச்சையாக இயங்குகிறார்கள். அதேபோல் எங்கள் கட்சியும் தனியாக சில வேலை திட்டங்களை முன்னெடுக்கும் போது தனிச்சையாக தான் செய்து கொள்ளும். பொதுவான ஒரு விடயங்களுக்கு எமக்கு அழைப்பு விடுத்தால் நாங்கள் கலந்து கொள்வோம் எனவும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Leave a comment