பாம்பன் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பாலம்!

16371 0

ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. 

ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலம், 1914–ம் ஆண்டு கட்டப்பட்டது. 104 ஆண்டுகள் பழமையான இப்பாலம், 2006–ம் ஆண்டு அகல பாதையாக மாற்றப்பட்டது. இப்பாதையில் சென்னையில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. 

சமீபத்தில், பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரத்துக்கு செல்ல வேண்டிய ரெயில்கள், மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், புத்தாண்டு பரிசாக, பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்தது. பழைய பாலம் 104 ஆண்டுகள் பழையதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன.

தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதனால் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும்.
புதிய பாலத்தின் நீளம் இரண்டரை கி.மீ. ஆக இருக்கும். இரட்டை ரெயில் பாதையாக இப்பாலம் அமையும். இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும்வகையில் இருக்கும். மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும்.

இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. ஸ்லீப்பர் கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படும். இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும்.

இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment