ரணிலுக்கு பதவியை வழங்க ஜனாதிபதி மறுக்க இயலாது ; அஜித் பி பெரோரா

287 0

பாராளுமன்றம் கலைப்பு தவறு என நேற்று கூறிய தீர்ப்பின் சூடு ஆர முன் மேன்முறையீடு நீதிமன்ற தீர்மானம் சரியென இன்றும் உயர் நீதிமன்றம் ஜனநாயத்தை காப்பாற்றியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரோரா தெரிவித்தார். 

 

நீதிமன்ற தீர்ப்புகளை கவனத்தில் கொண்டும், அடுத்த வருடம் அல்லலுற போகும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டும் ஜனாதிபதி விரைவாக முடிவொன்றுக்கு வரவேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த, மகிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவை இரத்துச் செய்யக் கோரி கையளிக்கப்பட்ட மனு தொடர்பான பரிசீலனைகள் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போது ஆஜராகிவிட்டு நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கூறுகையில்,

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமொன்று இல்லாமல் நாட்டு மக்கள் அல்லலுற வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. ஆகவே அதனை நிவர்த்திக்க வேண்டிய கடமை பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்ட எம்மிடமே உள்ளது. நாட்டு மக்களை கருத்தில் கொண்டாவது விரைவாக ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

அதனுடன், இது வரையில் சபாநாயகர் மீது இதுவரையில் எதிரணி முன்வைத்து வந்த குற்றச்சாட்டுக்களும் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, பாராளுமன்ற பெரும்பான்மை ஆதரவையுடைய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவியை வழங்க மறுக்க இயலாது.

நீதிமன்றம் சட்டத்துக்கு முரணாக இயங்கிய அரசாங்கத்துக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எனவே புதிய அரசாங்கம் தற்போது தேவை. அதனை விரைந்து நியமிக்க வேண்டியது ஜனாதிபதியின் கடமை. இல்லையேல் தொடர்ந்தும் நீதிமன்றில் தோல்விகளை காண ஜனாதிபதி உள்ளிட்டோர் தயாராக வேண்டும் என்றார்.

Leave a comment