மன்னார் மனித புதைகுழி குறித்து வெளியாகின புதிய அதிர்ச்சி தகவல்கள்

311 0

மன்னாரில் மனித புதைகுழியிலிருந்து இன்னும் பல உடல்கள் மீட்கப்படலாம் என அகழ்வுபணியில் ஈடுபட்டுள்ள தடயவியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார்

பிரிட்டனின் இணைய செய்தித்தாள் இன்டிபென்டன்ட்டிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மன்னார் புதைகுழிக்குள் காணப்படுவது ஒரு சமூகம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் புதைகுழியே இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி என பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதுவரை 70 வீதமான புதைகுழியையே அகழ்வுசெய்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் இதன்காரணமாக மீட்கப்படவுள்ள உடல்களின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

கால்கள் இரும்புகம்பிகளால் பிணைக்கப்பட்டுள்ள நிலையில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை மனித புதைகுழியில் உள்ள உடல்களிற்கு என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என  இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.

யார் கொலை செய்தார்கள் யாரை கொலை செய்தார்கள் என்பது  நிச்சயமற்றதாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள இன்டிபென்டன்ட் சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை நிச்சயமாக இது ஒரு சமூகம் என  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட மனித புதைகுழிகளை அகழும் பணிகள் இன்னமும் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன என மன்னார் மனித புiகுழியின் பிரதான விசாரணை அதிகாரி சமிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு இன்னமும் இந்த மரணங்கள் எப்போது இடம்பெற்றன என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கொல்லப்பட்டவர்கள் யார் அவர்களின் பெயர் விபரங்கள் என்ன அவர்கள் தமிழர்களா கிளர்ச்சிக்காரர்களாக சிங்கள படையினரா என்பது தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை பணியாளர்களும் காணாமல்போனவர்களின் உறவினர்களின் மனித புதைகுழி விவகாரத்தில் நீதி வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்களின் உறவினர்களின் சார்பில் குரல்கொடுக்கும் சட்டத்தரணி சந்திரபிரதாசம் நிரஞ்சன் ஒன்பது குடும்பங்களின் சார்பில் சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளார்.

அந்த ஒன்பது குடும்பத்தவர்களும் படையினர் மற்றும் இனந்தெரியாத குழுக்களால் மன்னாரில் கடத்தப்பட்டவர்களே மனித புதைகுழிக்குள் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ளன.

சித்திரவதைகளும் கொலைகளும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குற்றங்கள் என தெரிவித்துள்ள சட்டத்தரணி இந்த மனித புதைகுழிக்குள் குழந்தைகள் காணப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பல பாகங்களிலும் தமிழர்கள் புதைக்கப்பட்டுள்ள பல மனித புதைகுழிகள் உள்ளதாக நாங்கள் நிச்சயமாக கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை இலங்கை இராணுவம் மன்னார் மனித புதைகுழிக்கு தான் காரணமில்லை என தெரிவித்துள்ளது

இராணுவத்திற்கும் மனிதபுதைகுழிக்கும் தொடர்பில்லை என இராணுவப்பேச்சாளர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இந்த மனித புதைகுழிக்கு காரணமாகயிருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என இன்டிபென்டன்டிற்கு தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கை நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து யார் இதனை செய்திருந்தாலும் அவர்கள் அதற்கு பதிலளிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் இது யுத்தக்குற்றமில்லை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என தெரிவித்துள்ளார்.

Leave a comment