பெண் காவலர்களுக்கு கொடுமை? கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

291 0

காஞ்சீபுரம் போலீஸ் பயிற்சி மையத்தில் உயர் அதிகாரிகள் பெண் காவலர்களை அடிமையாக நடத்தி இழிவாக பேசி கொடுமைப்படுத்துவதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சீபுரத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள 193 பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற்று வரும் பெண் காவலர் ஒருவர் பயிற்சி அதிகாரிகள் தங்களை பல்வேறு வழிகளில் கொடுமைபடுத்துவதாக கூறி மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் மனு ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

காவலர் பயிற்சி மைய அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எங்களை அடிமையாக நடத்துகின்றனர். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். பொதுமக்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டிய காவலர்கள் கோழையாக இருக்கிறோம்.

இழிவாக பேசுகின்றனர்

பயிற்சியின் போது அளிக்கப்படும் ஓய்வு நேரத்தில் எங்களை முழுமையாக ஓய்வு எடுக்க விடுவதில்லை. உடல் சோர்வால் பயிற்சி வகுப்பில் காவலர்கள் தூங்கி விழுந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்லாமல் பயிற்சி அளிக் கும் அதிகாரியின் அறைக்கு வரவழைத்து இழிவாக பேசி அவமானப்படுத்துகின்றனர்.

பயிற்சி மையத்தில் உள்ள குறை தீர்க்கும் பெட்டியில் யாரும் குறைகளை எழுதி போட முடியாது. அப்படி யாரேனும் குறைகளை எழுதி போட்டால் கையெழுத்து மூலம் யார் அந்த புகார் கடிதத்தை எழுதினார் என்று கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

குறை தீர்க்கும் பெட்டியில் புகார் மனுக்கள் போடுவதை தடுக்க அதன் அருகே காவலர் ஒருவர் நிறுத்தப்பட்டார். யார் புகார் மனுக்களை போடுகிறார்களோ அவர்களை புகைப்படம் எடுத்து அனுப்ப அந்த காவலருக்கு பயிற்சி மையத்தின் துணை முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் குறைதீர்க்கும் பெட்டியில் புகார் மனுக்களை போட அனைவரும் தயங்கினர்.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தேன். அவர், என்னை நேரில் அழைத்து பேசினார். இதன்பின்பு, பயிற்சி மையத்தின் ஒவ்வொரு தளத்திலும் குறைதீர்க்கும் பெட்டி வைக்கப்பட்டது. எங்கள் நியாயமான குறைகளை கண்டறிந்து உடனுக்குடன் போலீஸ் சூப்பிரண்டு குறைகளை தீர்த்து வைத்தார்.

இதனால், பயிற்சி மையத்தின் முதல்வர் ராஜா மறைமுகமாக எங்களை கஷ்டப்படுத்தினார். அதாவது, ‘மைதானத்தில் வைத்து உங்களை என்ன செய்தாலும் யாரும் கேட்க முடியாது. என்ன வேண்டுமானாலும் செய்வோம். கேட்டால் பயிற்சி என்போம்’ என்று கூறி மன உளைச்சலை ஏற்படுத்தினார்.

இதனால் யாரும் குறைதீர்க்கும் பெட்டியில் புகார் மனுக்களை போடுவது இல்லை. தண்டனை வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. பெரிய தவறு செய்தாலும் பயிற்சி அதிகாரிக்கு தெரிந்த காவலர்களின் மகளாக இருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது இல்லை. சிறிய தவறு என்றாலும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

தண்டனை என்ற பெயரில் சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தி கொடுமைப்படுத்துகின்றனர். உடல் வலிக்கிறது, மயக்கம் வருகிறது என்றாலும் தண்டனையை குறைப்பது இல்லை. மனித உரிமையை பாடத்தில் மட்டுமே கற்பித்து கொடுக்கும் அதிகாரிகள் அதன்படி நடப்பது இல்லை. எனவே, பயிற்சி மையத்தில் பெண் காவலர்களுக்கு இருந்து வரும் கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், இதுதொடர்பாக போலீஸ் பயிற்சி மையத்தின் கூடுதல் டி.ஜி.பி., காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தங்களது விளக்கத்தை 5 வாரத்தில் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Leave a comment