கஜா புயல் தொடர்பான மத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் -மத்திய அரசு

237 0

கஜா புயல் தொடர்பான மத்திய குழுவின் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம் என மதுரை ஐகோர்ட் கிளையில் மத்திய அரசு கூறி உள்ளது.

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது. மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 நாட்கள் ஆய்வு பணியை மேற்கொண்டது.
ஆனால் இதுவரை  மத்திய குழு ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை.
இது தொடர்பான வழக்கில் கஜா புயல் பாதிப்பு அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாக, தமிழக அரசிடம், மத்திய குழு சில விளக்கங்களை கேட்டுள்ளது என ஐகோர்ட்  மதுரை கிளையில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
விளக்கம் தர தமிழக அரசு தாமதம் செய்வதால் தான், அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாகிறது என  மத்திய அரசு கூறி உள்ளது.
மத்திய குழு அறிக்கை மத்திய அரசிடம் எப்போது தாக்கல் செய்யப்படும் என கேட்டு தெரிவிக்குமாறு மத்திய அரசு வழக்கறிஞருக்கு ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
மத்தியக்குழு கேட்ட சந்தேகங்களுக்கு இன்றே விளக்கம் தரப்படும் என  தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

Leave a comment