வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்

264 0

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்து வருகிறது. கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான கஜா புயல், டெல்டா மாவட்டங்களை உருக்குலைத்தது. அதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதிக்கு மேல் பல நாட்கள் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. கடந்த 3-ந் தேதி முதல் 2 நாட்கள் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்தது. நேற்று முன்தினம் அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து மேலடுக்கு சுழற்சியாக இருக்கிறது.
இப்போது அதே வங்கக் கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உருவாக இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
புயல் சின்னமாக மாற வாய்ப்பு
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து மேலடுக்கு சுழற்சியாக இருக்கிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் நாட்களை பொறுத்து தான் கணிக்க முடியும். தற்போதுள்ள நிலவரப்படி தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யும். தாழ்வு பகுதி வலுப்பெறும் பட்சத்தில் புயல் சின்னமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது எதையும் உறுதியாக கூற முடியாது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘செங்கோட்டையில் 3 செ.மீ, ஆரணி, ஆய்க்குடியில் தலா ஒரு செ.மீ.’ மழை பெய்துள்ளது.

Leave a comment