மேலூரில் துப்பாக்கி முனையில் டாக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை

28 0

மதுரை மாவட்டம் மேலூரில் இன்று காலை டாக்டர் வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதர்கள் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜி பூங்கா சாலை பகுதியில் வசிப்பவர் டாக்டர் பாஸ்கரன். அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது அதே பகுதியில் தனியாக கிளீனிக் நடத்தி வருகிறார்.

டாக்டர் பாஸ்கரன் இன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றார். வீட்டில் அவரது மனைவி, வேலைக்கார பெண் மற்றும் காவலாளி மட்டும் இருந்தனர்.

பாஸ்கரன் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் வீட்டிற்குள் புகுந்தது. அந்த கும்பல் முகத்தை துணியால் மறைத்தபடி துப்பாக்கியை காட்டி காவலாளியை மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்றது.

பின்னர் டாக்டரின் மனைவி, பணிப்பெண் மற்றும் காவலாளியை ஒரு அறையில் தள்ளி அடைத்து கதவை பூட்டினர்.

அதன் பிறகு அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அறைக்குள் அடைக்கப்பட்டிருந்தவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.

அதன்பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக் கப்பட்டது. மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ், இன்ஸ்பெக்டர் ஏசு, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் செல்போன் கொள்ளை போயிருப்பதாக டாக்டர் பாஸ்கரன் போலீசாரிடம் தெரிவித்தார்.

கொள்ளையர்கள் துப்பாக்கி மற்றும் அரிவாள்களை கையில் வைத்திருந்ததாகவும், முகத்தை சிறிய டர்க்கி டவலால் மறைத்திருந்ததாகவும் காவலாளி கூறினார்.

இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் பழைய குற்றவாளிகள் யாரும் ஈடுபட்டுள்ளார்களா? திட்டமிட்டு டாக்டர் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published.