பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி இன்று நள்ளிரவு ரத்து?

364 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்றத்தைக் கலைப்பதாக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (02) நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் ரத்து செய்யும் வகையிலோ அல்லது வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக் கொள்ளும் வகையிலோ அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு விடுக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணை டிசம்பர் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதனால், இதற்கு முன்னரேயே இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதாக எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி இன்றைய சகோதர தேசிய வாரஇதழொன்று அறிவித்துள்ளது.

நாளைய தினம் அரசியல் களம் சூடேறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான பல நடவடிக்கைகள் முன்னர் நடந்தேறியுள்ளன.

பாராளுமன்றத்தில் 5 முறை இந்த அரசாங்கம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தமை, ரணில் தலைமையிலான கூட்டணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தெரிவித்துள்ளமை, ஜனாதிபதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தனித்தனியாக சந்தித்துள்ளமை, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளமை, மஹிந்த ராஜபக்ஷ – அத்துரலி ரத்ன தேரர் சந்திப்பு ஆகியன அவற்றுள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

Leave a comment