ஜனாதிபதி உருவாக்கிய அரசாங்கத்துடன் சபாநாயகர் விளையாடமுடியாது! – எஸ்.பி. திசாநாயக்க

330 0

அரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு தேர்தலுக்கு வழிவகுத்தால் அதில் ஆளும் கட்சி பெரும்பான்மை அரசாங்கம் அமைப்பது உறுதி. த.தே.கூட்டமைப்பு, ஸ்ரீல.மு.கா, ரிசாட், திகாம்பரம் அணிகள் வீழ்ச்சி காண்பதுடன் மனோ கணேசன் ஒன்றுமில்லாமற்போவார். ஐ.தே.க பெரும் வீழ்ச்சியடையும் இ,தொ,கா மேலும் பலமடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த பொது அபேட்சகராக தம்மை வரித்துக்கொண்டே சபாநாயகர் கரு ஜயசூரிய சர்வாதிகாரமாகச் செயற்பட்டு வருகிறார். அது தொடர்பில் ஐ.தே.க பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமையையும பிரதமர் பதவியையும் தக்க வைத்துக்கொள்ளும் நோக்கிலேயே செயற்படுகிறார்.

எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் எவ்விதத்திலும் மாற்றமடையாது. அரசாங்கமோ, அமைச்சரவையோ, பிரதமரோ மாற்றமடையப் போவதில்லை. வேறு ஒரு பிரதமரை நியமிக்கவும் முடியாது.

தேர்தல் இல்லாவிட்டால் ஜனாதிபதி உருவாக்கிய அரசாங்கத்துடன் சபாநாயகர் விளையாடமுடியாது. அதை முறையாக நடத்த வேண்டியது அவரது பொறுப்பு என்ற அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment