அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள் அமைச்சர்களுக்கு வழங்காதீர்கள் -மத்தும பண்டார

347 0

 “பொதுச் சேவையிலுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள். ஆனால் அமைச்சர்களுக்கும் அவர்களது அமைச்சுக்கும் சம்பளம் வழங்க வேண்டாம்.” என பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய மத்தும பண்டார,

“கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் காலியைச் சேர்ந்த சிங்களவர் மற்றையவர் தமிழர். குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் கொலை செய்துவிட்டு அவர்களது துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுள்ளார்கள்.

ஒரு பொலிஸ் அதிகாரியின் கையை வெட்டியுள்ளார்கள். இவ்வாறான அநியாயங்கள் கடந்த காலங்களில் இடம்பெறவில்லை.

அரசியல் செய்யும் தேரர்கள் கூறினார்கள் நாட்டை பாதுகாக்க மஹிந்த ராஜபக்ஷவை அழைக்குமாறு ஆனால் பாதுகாப்பு படைகளின் பிரதானியை மைத்திரிபால சிறிசேன கைது செய்தது மஹிந்தவின் கள்ள அரசாங்கத்தில்.

11 மாணவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணகொடவால் 2011இல் முதல் முறைப்பாடு பதியப்பட்டது.

அம் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்தே முப்படைகளின் தளபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை கொண்டு வருவதற்கு நிறைய பேர் கத்தினார்கள். அவர்கள் மாவீரர் தினத்தை அனுஷ்ட்டிக்க விடப்போவதில்லை என கூறினார்கள்.

ஆனால் இம் முறை 38 இடங்களில் மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளது. அரசியல் செய்யும் தேரர்களே இவற்றுக்கு பதில் சொல்லுங்கள்.

அமைச்சுக்களின் நிதியை முகாமை செய்யும் பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கேயுரியது. அமைச்சர்களுக்கும் அமைச்சு அலுவலகங்களுக்கும் வழங்கும் நிதி தொடர்பான முழு பொறுப்பு செயலாளர்களுக்கேயுரியது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையால் அமைச்சர்களின் வாகனங்களை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளருக்குரியது.

இடை நிறுத்தியுள்ள கம்பெரலிய வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் கேட்டுக்கொள்கிறேன்.”என தெரிவித்தார்.

Leave a comment