அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் லோக் ஆயுக்தா பணி தொடக்கம்!

454 0

அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கி உள்ளது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது கூறப்படும் ஊழல் புகார் பற்றி விசாரிப்பதற்காக, தனியாக விசாரணை அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, பிரதமர், மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிப்பதற்காக லோக் பாலை அமைக்கவும், மாநிலங்களில் முதல்-மந்திரி, முன்னாள் முதல்-மந்திரி, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பணியாளர்கள் மீதான ஊழல் புகாரை விசாரிப்பதற்காக லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தவும் வகை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, பெரும்பாலான மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் தமிழ்நாட்டிலும் லோக் ஆயுக்தா அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் விதிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:
* லோக் ஆயுக்தா தொடர்பாக தற்போது பிறப்பிக்கப்படும் இந்த விதிகள், ‘தமிழ்நாடு லோக் ஆயுக்தா விதிகள்-2018’ என்று அழைக்கப்படும். லோக் ஆயுக்தா சட்டப்படி நியமிக்கப்படும் தேர்வுக்குழு, 3 நபர்களை கொண்ட தேடுதல் குழுவை நியமிக்கும். அந்த 3 நபர்களும் குறிப்பிட்ட பிரிவில் சிறப்பு அறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
* தேடுதல் குழுவில் உள்ள 3 பேரில் ஒருவரை அந்த குழுவின் தலைவராக தேர்வுக் குழு நியமிக்க வேண்டும். லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரைக்கும் தேர்வுக் குழுவின் முடிவு, பெரும்பான்மையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
* தேவைப்பட்டால் தேடுதல் குழுவின் கால அவகாசத்தை தேர்வுக்குழு நீட்டித்துக்கொள்ளலாம். தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் திருப்தி அளிக்கவில்லை என்றால் அதை தேடுதல் குழு திருப்பி அனுப்பலாம்.
* தேடுதல் குழுவை எந்த நேரத்திலும், காரணத்தை எழுதி பதிவிட்டுவிட்டு மாற்றுவதற்கு தேர்வுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. தேடுதல் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவி கால அளவு 2 மாதம்தான். அதன் தலைவரின் முடிவின்படி சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில் கூட்டம் நடத்திக்கொள்ளலாம்.
* தேடுதல் குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் பொதுவான சம்மதத்துடன் நடைபெற வேண்டும். தேடுதல் குழுவுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் பெரும்பான்மையான முடிவுதான் நிலைநிற்கும்.
* லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர் கள் பெயர்களை தேர்வுக்குழுவிடம் பரிந்துரைப்பதற்காக பரிசீலனை செய்யும்போது, லோக் ஆயுக்தா சட்டத்தின் 3-ம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை தேடுதல் குழு கருத்தில் கொள்ள வேண்டும்.
* தேடுதல் குழுவுக்கு அரசு ரீதியான உதவிகளை செய்வதற்காக அரசின் துணைச் செயலாளர் அளவில் ஒருவரை நியமிக்க வேண்டும். லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள், மத்திய அல்லது மாநில அரசுப்பணியில் இருக்கக்கூடாது.
* லோக் ஆயுக்தா ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டப்படி புகார் கூறப்பட்டால், அப்போது நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றத்துக்கு ஏற்ப தண்டனையை விதிக்கலாம்.
* லோக் ஆயுக்தாவில் புகார் கூற விரும்புகிறவர்கள், தனது பெயர், முகவரி மற்றும் குற்றம்சாட்டப்படும் நபரின் அரசு பதவி, குற்றச்சாட்டு ஆகியவற்றை எழுத்து மூலம் அளிக்க வேண்டும். அவர் தனது புகாரை நேரில் வந்து லோக் ஆயுக்தாவின் பதிவாளர் அல்லது இணையான அதிகாரியிடம் அளிக்கலாம் அல்லது தபால் மூலமாகவும் அளிக்கலாம். அந்த குற்றச்சாட்டு பதிவு செய்துகொள்ளப்படும்.
* அந்த புகாரில் உறுதியான தகவல்கள் இல்லை என்றால், புகார் தந்த 15 நாட்களுக்குள் புகார்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பி, புகாரில் உள்ள குறைபாடுகளை களையும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.
* குறைபாடுகளை தீர்க்க கூடுதல் நேரம் கேட்டால் புகார்தாரர்களுக்கு கால அவகாசம் அளிக்கலாம். குறிப்பிட்ட காலத்துக்குள் குறை பாடுகள் களையப்படாவிட்டால், அந்தப் புகாரை லோக் ஆயுக்தாவின் தலைவர் அல்லது உறுப்பினர் தள்ளுபடி செய்துவிடலாம்.
* லோக் ஆயுக்தாவின் தலைவரோ, உறுப்பினரோ விசாரிக்கும் அளவிலான குற்றச்சாட்டு இல்லாத பட்சத்திலோ; நல்லெண்ணம் இல்லாமல் அடிப்படை ஆதாரம் இல்லாத புகாரை கூறும் பட்சத்திலோ; குற்றச்சாட்டை விசாரிக்க முகாந்திரம் இல்லாத நிலையிலோ; ஏற்கனவே விசாரிக்கப்பட்ட குற்றச்சாட்டோ அல்லது ஏற்கனவே கூறப்பட்ட குற்றச்சாட்டோ கூறப்பட்டால் அந்த புகாரை லோக் ஆயுக்தா நிராகரிக்கலாம்.
* லோக் ஆயுக்தா தனக்குள்ள தனி அதிகாரத்தின் அடிப்படையில் வாய்ப்பு அளிக்கும் வகையில், ஏன் உங்கள் புகாரை தள்ளுபடி செய்யக்கூடாது? என்று புகார்தாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம்.
* குற்றம்சாட்டப்பட்டவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் அவரது அடையாளம் போன்றவை, பத்திரிகைகளால் வெளியிடப்படலாகாது. விசாரணையை எந்த கட்டத்திலாவது நிறுத்துவதற்கு லோக் ஆயுக்தா முடிவு செய்தால் அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும்.
* விசாரணையில் இடையில் புகார்தாரர் இறந்து போனாலோ அல்லது புகாரை இடையில் விட்டுச்சென்றாலோ, தொடர்ந்து அந்த குற்றச்சாட்டு பற்றி லோக் ஆயுக்தா விசாரணை நடத்தலாம். புகார்தாரர் குற்றச்சாட்டை தாக்கல் செய்த பிறகு, லோக் ஆயுக்தாவுக்கு திருப்தி ஏற்படாத நிலையில் அதை திரும்ப பெறமுடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அமையவுள்ள லோக் ஆயுக்தா அமைப்புக்கு செயலாளர், பதிவாளர், இயக் குனர், சார்புச் செயலாளர் உள்பட 103 பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

Leave a comment