கட்டாக்காலி மாடுகளால் பொதுமக்கள் பெரும் அவதி

288 0

கிளிநொச்சி நகர் மற்றும் இரணைமடு சந்தி உள்ளிட்ட ஏ9 வீதியில் கட்டாக்காலி மாடுகள் வீதியின் நடுவில் நிற்பதால் போக்குவரத்துக்களில்  பெரும் சிரமங்கள் ஏற்படுவதாகச் சாரதிகள் மற்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட குறித்த பகுதிகளில் இவ்வாறு கட்டாக்காலி மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஏ9 வீதி ஊடாக போக்குவரத்து அதிகளவில் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறு வீதியின் நடுவில் மாடுகள் காணப்படுவதால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் தமது வாகனங்கள் சேதமடைவதோடு, பல மாடுகள் இறந்தும், காயப்பட்டும் வருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறான நிலையில் தாம் இரவு நேரங்களில் அச்சத்துடனே வாகனங்களைச் செலுத்த வேண்டி உள்ளதாகவும், பகல் நேரங்களிலும் இவ்வாறு மாடுகள் போக்குவரத்திற்கு சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, கால்நடைகளினால் ஏற்படும் அசௌகரியங்களிலிருந்து பாதுகாப்பு தருமாறும், விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மக்கள் வினயமாக வேண்டுகின்றனர்.

Leave a comment