நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மகன் ஒருவர் தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் குறித்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மன நோயாளியான மகனுக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையிலேயே தந்தையை பொல்லால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தை என்றும், மன நோயாளியான மகன் தினந்தோறும் சண்டையிடுவதாகவும் நேற்று முந்தினம் இரவிலிருந்து சண்டை உக்கிரமடைந்த நிலையிலேயே இவர் உயிரிழந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 4 பிள்ளைகளான ஏ.ஜே.ஜீனதாஸ வயது 74 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹட்டன் கைரேகை அடையாளப்பிரிவு மற்றும் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் தற்போது டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதுடைய மேற்படி மகனை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும், அதேவேளை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

