ரணிலின் முயற்சிகளை முறியடித்த ஜனாதிபதி – ரோஹித

407 0

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி மற்றும் பாராளுமன்றத்தின் ஸ்திரமற்ற தன்மையை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க தனது ஊழல்களை மறைப்பதற்கு முயற்சிக்கின்றார் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலுக்கு எதிராக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதன் மூலம் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் மஹிந்தராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது. எனவே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதனையே நாமும் கோருகின்றோம்

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியினர் அதற்கு எதிராகவே உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர். அடுத்து யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தார். ஐ.தே.கவினர் ஒருபுறம் தேர்தல் வேண்டும் எனக் கூறிக்கொண்டு மறுபுறம் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தேர்தல் வேண்டாமெனக் கூறுகின்றனர். இது தான் ரணில் விக்ரமசிங்கவினுடைய அரசியல் ஆகும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Leave a comment