அரசியல் அமைப்பையும், பாராளுமன்ற கட்டளைகளை மீறியுமே சபாநாயகர் கரு ஜெயசூரிய தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றார்.
இவ்வாறான பக்கச்சார்பான சபாநாயகரையோ அவரது தீர்மானங்களையோ ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம் என ஆளும் கட்சி தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராக எத்தனை நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் நாமே அரசாங்கம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பாராளுமன்றத்தில் இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அவர்களால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்களான தினேஸ் குணவர்தன , நிமல் சிறிபால டி சில்வா , விமல் வீரவன்ச , உதய கம்மன்பில , டலஸ் அழகப்பெரும , ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட அமைச்சர்களும் மற்றும் எம்.பிக்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.
தற்போதைய நிலைமையில் பாராளுமன்றத்தை சபாநாயகர் சீர்குலைத்துவிட்டார்.
முன்னர் கிளிநொச்சி செல்லும் போது பரிசோதனை செய்வது போன்றே இப்போது பாராளுமன்றத்திற்கு வரும் போது எம்மை பரிசோதிக்கின்றனர்.
சபாநாயகரின் செயற்பாட்டுக்கு எதிராகவே நாங்கள் இன்றைய தினம் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்.
சபாநாயகர் அரசியலமைப்பு 3 விடயங்களுக்கு அமைவாக செயற்பட வேண்டும் அனுரகுமார, லக்ஷ்மன் கிரியெல்லவின் சிறிகொத்தவின் தேவைக்காக அன்றி நிலையியல் கட்டளைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றனர்.

