டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அறிக்கை அளித்து, மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அரசு சார்பிலும், தனியார் நிறுவனம், அரசியல் கட்சிகள், திரை உலகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுவருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.
அதில் தமிழகத்துக்கு தேவையான மத்திய அரசின் நிதி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. கஜா புயலினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன? அதிலிருந்து மக்களை மீட்கும் பணிகள் மற்றும் நிவாரணத்துக்கு ஆகும் செலவுகள் குறித்து கூறப்பட்டுள்ளது. கணிசமான நிதியை முதல் கட்டமாக ஒதுக்கும்படி பிரதமரிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இதையடுத்து மத்திய அரசு முதற்கட்டமாக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில், சேதங்களை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு தனது அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழகத்துக்கு அனுப்பி ஆய்வுகளை நடத்தும். புயல் சேதங்களை அந்த குழு மதிப்பிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கும். அதன் பின்னர் தேவையான நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்கும்.

