ஏறாவூரில் இரட்டைக் கொலை 800 இற்கு மேற்பட்டோரிடம் விசாரணை

327 0

eravooஏறாவூரில் கடந்த 11ஆம் திகதி அன்று இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 800 இற்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 50 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு கோணங்களில் இடம்பெற்று வரும் இந்த விசாரணைகளில் இதுவரை சந்தேகத்திற்கிடமான பலர் விசாரிக்கப்பட்டுள்ளதோடு வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இக்கொலைச் சம்பவத்தோடு தொடர்புபட்டதாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் இதர குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளை விசாரணை செய்து மேலும் அவர்களுக்குள்ள குற்றச் செயல் வலைப்பின்னலை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது என்று மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைக்கும் அப்பாற்பட்டதாக பிரதான சூத்திரதாரியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு விசாரணைகளை தாங்கள் பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கிணங்க கொலையாளிகளைத் தேடி 17 விஷேட பொலிஸ் குழுக்களும் 80 இற்கு மேற்பட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களும் புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கொலைகள் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு ஒக்ரோபெர் 05 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.