ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை

247 0

ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது.

ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது.

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவன சட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு, பல்வேறு குற்றங்கள், குற்ற சதிகளை விசாரிப்பதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் சுமார் 187 பிரிவுகள் மற்றும் 67 மத்திய அரசு சட்டங்களின் படி பொது அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதன் மூலம் குற்ற வழக்குகளின் விசாரணைக்காக மாநில அரசுகளின் பிரத்யேக அனுமதி இன்றி அந்தந்த மாநிலங்களில் சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் நடவடிக்கையாக, சி.பி.ஐ.க்கு வழங்கியுள்ள பொது அனுமதியை திரும்ப பெறுவதாக ஆந்திர மாநில அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. போன்ற உயர் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது.

இந்த நடவடிக்கை மூலம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆந்திராவுக்குள் விசாரணை மற்றும் சோதனைக்காக அனுமதியின்றி நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது. அதேநேரம் கோர்ட்டு உத்தரவு மூலம் நடத்தப்படும் விசாரணை மற்றும் சோதனைகளுக்கு மாநில அரசிடம் தனியாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

ஆந்திராவின் இந்த முடிவை தொடர்ந்து மேற்கு வங்காள அரசும் சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டு உள்ள பொது அனுமதியை நேற்று திரும்ப பெற்றது. கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் பேசிய கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவை தான் ஆதரிப்பதாக தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘சந்திரபாபு நாயுடு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை மிகச்சரியானது. சி.பி.ஐ. மற்றும் பிற விசாரணை நிறுவனங்களை பா.ஜனதா தனது அரசியல் நலன்களுக்காகவும், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்துகிறது’ என்று தெரிவித்தார்.

ஆனால் மேற்கு வங்காள அரசின் இந்த நடவடிக்கை மூலம் அந்த மாநிலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சாரதா, நரதா போன்ற ஊழல் வழக்குகளில் நடந்து வரும் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என சி.பி.ஐ. அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். எனினும் இந்த வழக்குகளில் எந்தவித கோர்ட்டு உத்தரவும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா மற்றும் மேற்கு வங்காள அரசுகளின் இந்த முடிவுக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஊழல் விவகாரத்தில், எந்த மாநிலத்துக்கும் எந்தவொரு இறையாண்மையும் இல்லை. மறைப்பதற்கு தங்களிடம் ஏராளமான விஷயங்கள் இருப்பதால்தான், இந்த மாநில அரசுகள் சி.பி.ஐ. அமைப்பை தங்கள் மாநிலத்துக் குள் அனுமதிக்க மறுக்கின்றன’ என்று குற்றம் சாட்டினார்.

Leave a comment