எமக்கு 113 இல்லையெனில் நாம் எதிர்க்கட்சியில் அமரவேண்டும் – குமார வெல்கம

352 0

இன்றைய தினம் தமது கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வின் போது நடந்துகொண்ட விதம் தொடர்பில் தான் கவலையடைவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாகத் தானும் சபாநாயகர் பிழை எனக் குற்றம் சாட்டியபோதும், இன்று சபாநாயகருக்கு தனது ஆசனத்திற்குக் கூட வர முடியாத நிலை ஏற்பட்டது. அத்துடன் கடந்த 25 வருடங்களாக பாராளுமன்றில் தான் இருப்பதாகவும், இதுவரை இதுபோன்றதொரு கீழ்த்தரமான சம்பவத்தைத் தான் கண்டதில்லை எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவங்களை சர்வதேசம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எமது நாட்டுக்கு ஏற்படப்போகும் நிலைமை தொடர்பில் தான் கவலையடைவதாகவும் பாராளுமன்றில் ஏற்பட்ட பிரச்சினைக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் கூறினார்

பாராளுமன்ற உறுப்பினர்கள் 113 பேர் உள்ள அணிக்கு ஆட்சியை வழங்கவேண்டும் என முதலில் தான் தெரிவித்ததை மீண்டும் நினைவு படுத்திய குமார வெல்கம, இன்றும் தான் அதே நிலைப்பாட்யிலேயே இருப்பதாகவும், தனக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் தனக்கு நன்கு பரீட்சயம் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் ” எமக்கு 113 இல்லையெனில், ஏன் நாம் ஆளும் கட்சியில் இருக்க வேண்டும்” எனவும் கேள்வியெழுப்பினார். இந்தப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியிடம் தீர்வு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை வழங்குவதாயின் அது எவ்வாறு இருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கும் பதிலளித்த குமார வெல்கம ” எங்களுக்கு 113 இல்லையெனில் நாம் ஒரு தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு எதிர்க்கட்சியில் அமர்வோம் ” எனக் கூறுவேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மேலும் தெரிவித்தார்.

Leave a comment